அவசர அவசரமாக "டெல்லி" கிளம்பும் எடப்பாடி.. மேலிடத்தின் அழைப்பா.. காரணமே வேற போல.. ஓபிஎஸ்ஸூக்கு தலைவலி
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, டெல்லி கிளம்பி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதற்கான காரணங்களும் கசிந்து வருகின்றன.
அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. நீதிமன்ற அவசரம் கருதி, அன்றைய தினமே பதவியும் ஏற்றுக் கொண்டார்.. இது தொடர்பாக ஓபிஎஸ் அப்பீல் சென்றுள்ளார்..
அதன் முடிவுகள் என்னாகும் என்று தெரியவில்லை.. மேலும், தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறது என்று இறுதி முடிவு எடுக்க போகிறது என்று தெரியவில்லை..

பூரிப்பு ஹேப்பி
திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், திருத்தப்பட்ட விதிகளுக்கு, இதுவரை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தந்ததில்லை.. அப்படிஇருக்கும்போது, திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் இந்த முறையும் ஒப்புதல் தரும்? என்று சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.. இப்படியான சட்டசிக்கல்கள் இருக்கின்றன.. எனினும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் அது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வியூகங்கள்
அதேபோல, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடமும் அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இந்த சந்திப்பின்போது, எம்பி தேர்தலில் கூட்டணி அமைப்பது, தமிழகத்தில் உள்ள இதர கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது உள்ளிட்ட தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி முடிவு
2 நாட்களுக்கு முன்பு, ஒரு தனியார் டிவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தந்திருந்த பேட்டியில், "தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்புகள் வலுவின்றி உள்ளது அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எங்கெல்லாம் பாஜக வலுக்குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி கைகொடுக்கும் என்பதால் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்கிறோம்" என்று கூறியிருந்தார்.. அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இதைதானே ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது" என்றுகூறி, அமித்ஷாவின் பேச்சை வழிமொழிந்திருந்தார்.

வழிமொழிந்தார்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தெரியவந்துள்ளது... அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டு அண்ணாமலை வாழ்த்து சொல்லி உள்ளார்.. இந்த தகவலை அண்ணாமலையே, தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்..

ஹேப்பி வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்னபோது, அவர்கள் 2 பேரும் மனம் விட்டு பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தபிறகு அண்ணாமலை நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டது. அதனால்தான், "பாஜக மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழுவானது, கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும்' என்று ஒதுங்கி கருத்து கூறியிருந்தது, அனைவராலுமே கவனிக்கப்பட்டது..

கனிகிறது காலம்
இதற்கிடையே மத்திய அமைச்சர் எல்.முருகனும் நேற்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசியிருக்கிறார்.. அவர்களும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாக சொல்லப்படுகிறது.. இந்நிலையில்தான், டெல்லி செல்ல திட்டமிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. டெல்லி பயணத்துக்கு பிறகு, தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை, வியூகங்களை தீவிரப்படுத்துவார் என்றும், அதைவைத்தே, அதிமுகவில் வரும் நாட்களில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. ஆக, எல்லா பக்கமும், கூட்டணி "கனிந்து" கொண்டிருக்கிறது போலும்.. அப்படின்னா ஓபிஎஸ்???












Click it and Unblock the Notifications