இதான் சான்ஸ்.. “பொறுக்கவேண்டாம்” செம குஷியில் அதிமுக ‘தலை’கள்.. எடப்பாடி காதில் சேதி.. அதிரும் பாஜக!
அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் எடப்பாடி காதுக்கு இந்த சேதியை கொண்டு சேர்க்க முயற்சிக்கின்றனராம்.
சென்னை : அண்ணாமலையின் 'கூட்டணி' தொடர்பான பேச்சு ஒருபக்கம் அதிர்ச்சி என்றால், இன்னொருபுறம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் செம ஹேப்பியாம். இப்படியாவது கூட்டணியில் இருந்து பாஜக விலகட்டும், சிறுபான்மையினர் வாக்குகள் நம் பக்கம் திரும்பட்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்களாம்.
அதிமுக - பாஜக கூட்டணியில் அவ்வப்போது புகைச்சல்கள் எழுந்து வருகின்றன. அதன் உச்சமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணி இனியும் இருந்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனப் பேசியிருக்கிறார்.
இது கூட்டணிக்குள் இருக்கும் மோதலை வீதிக்கு கொண்டு வந்திருக்கிறது. அண்ணாமலையின் இந்தப் பேச்சால் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த பல நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனராம்.

பெரும் சலசலப்பு
நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது பாஜகவினருக்கு மட்டுமல்லாமல் அதிமுகவினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டணிக்காக இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன். அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் எனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர்கள் மத்தியில்
பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் அண்ணாமலையின் இந்தப் பேச்சு இங்கு பேச வேண்டியது அல்ல என்று கூறினர். மேலும் சிலர் அண்ணாமலைக்கு ஆதரவாகவும் பேசினர். அண்ணாமலை இவ்வாறு பேசிய தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் அண்ணாமலை இவ்வாறு பேசியதை வெளிப்படையாகவும் ஒப்புக்கொண்டனர். அண்ணாமலையின் வலதுகையாக கருதப்படும் அமர் பிரசாத் ரெட்டி அண்ணாமலையின் கருத்தை வரவேற்றிருந்தார்.

அதிமுகவில் அனல்
அதேசமயம், அண்ணாமலையின் இந்தப் பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னதாக பாஜக ஐடி விங் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அடுத்தடுத்து அதிமுகவில் சேர்ந்த விவகாரம், இரு கட்சிகளிடையே வார்த்தைப் போரில் தொடங்கி உருவப்படம் எரிப்பு வரை சென்றது. பின்னர், இரு கட்சிகளின் சீனியர்களும் தலையிட்டு பிரச்சனையை சுமுகமாக்கினர். இப்படியான சூழலில் தான் அண்ணாமலையின் பேச்சு மீண்டும் அதிமுகவினரிடையே அனலைக் கிளப்பியது.

விடை கொடுக்கிறோம்
அண்ணாமலையின் அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், ஒருபுறம் பலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாம். அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் இதுகுறித்துப் பேசுகையில், "ரொம்ப சந்தோஷம். யார் இருந்தால் என்ன, யார் இல்லையென்றால் என்ன? அரசியல் கட்சிகள் நல்லிணக்கத்தோடு இருந்த நிலையை மாற்றி, வார் ரூம் நடத்தி, சொந்த கட்சிக்காரர்களையே கொச்சைப்படுத்துவது பாஜகவில் இந்த காலகட்டத்தில் தான் உருவானது. அண்ணாமலை எடுக்கும் முடிவு நல்ல முடிவுதான். வரவேற்கிறோம், விடை கொடுக்கிறோம்" என்றார்.

அதிமுக சீனியர்கள்
இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, "தமிழ்நாட்டில் அதிமுகதான் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் முடிவு செய்யும். அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும், கூட்டணியை வழிநடத்தும் எனத் தெரிவித்தார். அதேபோல முன்னாள் அமைச்சர் பொன்னையன், "பாஜகவின் கொள்கை வடநாட்டு அரசியலை, இந்தி வெறியர்களை ஊக்குவிப்பது. திராவிடக் கட்சிகளின் கொள்கை, தமிழ்நாட்டு மக்கள், மொழியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது. இரு கட்சிகளின் கொள்கைகள் வேறு." என்றார்.

அதிமுக தான் தலைமை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, "மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சியோடு தான் கூட்டணி வைக்கப்படும். குட்டக் குட்ட குனியும் ஆள் நாங்கள் கிடையாது. எங்களை யாரும் குட்டவும் விடமாட்டோம். நாங்கள் குனியவும் மாட்டோம். ஆனால், கட்சி நிர்வாகிகளிடம் பேசியது தொடர்பாக கருத்து கூறுவது சரியாக இருக்காது. கட்சியை வளர்ப்பதற்கு ஆயிரம் பேசலாம். எதுவாக இருந்தாலும் சரி, கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.

சீனியர்கள் நிலைப்பாடு
மேலும், அதிமுகவில் முன்னணி நிர்வாகிகள் பலரும் பாஜக உடனான கூட்டணியை ஏற்கவில்லை. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ஏவப்படும் என்பதற்கு அஞ்சியே அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து வருகிறது, சில முன்னாள் அமைச்சர்களின் நிர்பந்தத்தால் எடப்பாடி பழனிசாமி வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்து, சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததால் தான் ஆட்சியையும் இழந்து நிற்கிறோம் என்பதே சீனியர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.

ஈபிஎஸ் காதுக்கு சேதி
பாஜக உடனான கூட்டணியால் நமக்கு கிடைக்கும் வாக்குகளை விட, அந்தக் கட்சி கூட்டணியில் இல்லையென்றால் சிறுபான்மையினர் வாக்குகளும், பொதுவானவர்களின் வாக்குகளும் அதிகம் கிடைக்கும், நேற்று அரசியலுக்கு வந்தவர்களெல்லாம் அதிமுகவை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் எடப்பாடி பழனிசாமி பொறுத்துக்கொண்டு அமைதி காக்கக்கூடாது, பாஜகவுடனான கூட்டணி விவகாரத்தில் துணிந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும், அதுதான் அதிமுகவின் தொண்டர்கள் விரும்புவது என்று எடப்பாடி பழனிசாமி காதில் போட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications