ப்ச் வேதனை.. ஏன் வரவில்லை.. சட்டென கேட்ட உதயநிதி ஸ்டாலின்.. ஒரே வருத்தம்.. என்ன நடந்தது?
தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் இந்தியா மற்றும் நேபாள கால்பந்து அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான சர்வதேச கால்பந்து போட்டி நேற்று நடந்தது. நேரு உள் விளையாட்டு அரங்கில் இதை தொடங்கி வைத்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனையோடு பேசியது கவனம் பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் . இந்த நிலையில் அமைச்சர் பணி மட்டுமின்றி கட்சி ரீதியான பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் கவனித்து வருகிறார்.
சினிமா பணிகளை முற்றாக நிறுத்திவிட்டு அமைச்சரவை பணிகள் மீதுதான் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

விளையாட்டு
இது மட்டுமின்றி தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது.உலக அளவில் இப்படி ஒரு செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை என்று மெச்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த தொடர் நடைபெற்றது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற்றது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தயார் செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. மேலும் உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தையும் அரசு கையில் எடுத்துள்ளது.

ஹாக்கி
இதற்காக தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை அருகே இடம் கிடைக்காத நிலையில் திருச்சி அருகே இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச போட்டிகளை நடத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான விரைவில் தொடங்க உள்ளது. இது போக சென்னையில் ஹாக்கி, கால்பந்து, டென்னிஸ் போட்டிகளை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் சென்னையில் இந்தியா மற்றும் நேபாள கால்பந்து அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான சர்வதேச கால்பந்து போட்டி நேற்று நடந்தது. நேரு உள் விளையாட்டு அரங்கில் இதை தொடங்கி வைத்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனையோடு பேசியது கவனம் பெற்றுள்ளது.

பேட்டி
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் நடக்கும் சர்வதேச போட்டிகளுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். அது என்ன விதமான விளையாட்டு போட்டியாக இருந்தாலும் மக்கள் ஆதரவு அவசியம். தற்போது இந்தியா நேபாள அணிகளுக்கு இடையிலான கால் பந்து போட்டி நடக்கிறது. ஆனால் இதை காண பெரிய அளவில் மக்கள் வரவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. வேதனை அளிக்கிறது. சர்வதேச போட்டிகளுக்கு மக்கள் ஊக்கம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இங்கே போட்டிகள் அதிகம் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார் .

சர்வதேச போட்டி
தமிழ்நாட்டில் பல சர்வதேச போட்டிகளில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. பல்வேறு சர்வதேச போட்டிகளை தமிழ்நாடு கொண்டு வருவது தொடர்பாக அரசு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று நடந்த போட்டிக்கு மக்கள் கூட்டம் சரியாக வராததால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications