"நம்பர் 42".. மோச்சா புயலால் தமிழ்நாட்டிற்கு வரப்போகும் "வேதனை".. இது என்ன வெந்த புண்ணில் வேலா?
சென்னை: மோச்சா புயல் இன்று மாலை உருவாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதனால் வானிலை ரீதியாக முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட உள்ளது.
பொதுவாக ஒரு புயல் ஒரு இடத்தை தாக்க வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் கடைசி நேரத்தில் அல்லது புயல் முழுமையாக உருவான பின் அந்த புயல் அந்த குறிப்பிட்ட பகுதியை நோக்கி செல்லாமல் வேறு இடத்தை நோக்கி செல்கிறது.

உதாரணமாக எதிர் திசையை நோக்கி செல்கிறது. அப்படி செல்லும் பட்சத்தில்.. அந்த புயல் மழை கொடுக்கும் மேகங்களை அப்படியே எடுத்துக்கொண்டு சென்றுவிடும். வரட்டாம் மாமே டூர்ர்ர் என்று சொல்லிவிட்டு புயல் மொத்தமாக மழை மேகங்களை வாரிக்கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடும்.
இதனால் முதல் இடத்தில் கடுமையான வெயில் அடிக்கும். வெப்பநிலையும் உயரும். இதேபோல் தமிழ்நாட்டில் இதற்கு முன் நடந்து உள்ளது.
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய சில புயல்கள் மழை காலத்தில் மேற்கு வங்கம், ஒடிசா நோக்கி சென்று, தமிழ்நாட்டில் மழை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளது. இதனால் தமிழ்நாடு மழை காலங்களில் கூட சமயங்களில் மழை ஏமாந்து உள்ளது.
தற்போது அதே வானிலை பாதிப்பு கோடை காலத்தில் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது.
கோடைகாலம்:
அதன்படி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 3 நாட்களுக்கு முன்புதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலிமை அடைந்து வருகிறது.
இது நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது. நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதை தொடர்ந்து வங்கக்கடலில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக இன்று வலுபெறக்கூடும்.
இன்று மாலை உருவாகும் இந்த புயலுக்கு மோச்சா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் உள்ளது.
பொதுவாக கோடைகாலத்தில் தமிழ்நாட்டை புயல் தாக்காது. ஒடிஸாவை சில சமயங்களில் தாக்கி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில்தான் தற்போது உருவாகி வரும் மோச்சா புயல் ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
ஆனா வங்கக்கடலில் தற்போது 36 டிகிரி செல்சியசுக்கும் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. அதனால் இந்த புயல் கண்டிப்பாக உருவாகும். அதோடு மிக மிக வலிமையான புயலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவாகி வரும் மோச்சா புயல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மியான்மர் நோக்கி செல்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் புயல் தாக்காது. அதே சமயம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மேகங்களை இது இழுத்து செல்லும். இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயல்பான வெயிலை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 42ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது.
வெந்த புண்:
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல ஏற்கனவே வெயிலாக இருக்கும் வெப்பநிலையில் கூடுதல் வெப்பநிலை ஏற்பட உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. நேற்று சேலத்தில் 100 நேற்றும் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயர்ந்து உள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 99 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. வேலூரில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. ஈரோடு, நாமக்கல்லில் 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் இந்த பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications