உயிரை பறிக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! அறிகுறிகள் என்ன? தப்பிப்பது எப்படி? உஷார் மக்களே!
சென்னை: தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பரவலாக வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. எனவே ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனை அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத்தாக்கம், சாதாரண உடல் உபாதை அல்ல, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு மருத்துவ அவசர நிலை. இதை முதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக்
நமது உடலின் இயல்பான வெப்பநிலை 37°C (98.6°F). வெயில் அதிகமாக இருக்கும்போது, உடல் தன்னைத் குளிர்வித்துக் கொள்ள வேர்வை மூலம் வெப்பத்தை வெளியேற்றும். ஆனால், சுற்றுப்புற வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும்போது (சுமார் 40°C-க்கு மேல்), உடலால் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் போகிறது.
உடலில் போதிய தண்ணீர் இல்லாதபோது வேர்வை சுரக்காது. இதனால் உடலின் வெப்பநிலை 104°F (40°C) க்கும் மேல் உயர்ந்து உறுப்புகளைப் பாதிக்கத் தொடங்குகிறது.
எப்படி கண்டுபிடிப்பது?
உடல் தொடுவதற்கு மிகவும் சூடாக இருப்பது, தோல் வறண்டு, சிவந்து காணப்படுவது, கடுமையான தலைவலி மற்றும் மயக்கம் வரும் உணர்வு, வாந்தி எடுப்பது போன்ற உணர்வு அல்லது வாந்தி எடுத்தல், பேசுவதில் தடுமாற்றம், பதற்றம் அல்லது சுயநினைவை இழத்தல், இதயம் மிக வேகமாகத் துடிக்கும் இதெல்லாம் இருந்தால் உடலில் வெப்பம் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம்.
தப்பிக்க என்ன செய்யலாம்?
இது ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான தொடக்கம். இதிலிருந்து தப்பிக்க, வேண்டும் எனில் உடலில் நீர் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாகம் எடுக்கிறதோ இல்லையோ, தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதிக காரம் மற்றும் எண்ணெய் பலகாரங்களைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சாப்பிடுங்கள். வெளிர் நிறத்திலான, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். இது காற்றோட்டத்திற்கு உதவும்.
உணவில் கவனம்
மிக குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். வெளியே செல்லும்போது குடை, தொப்பி அல்லது சன்கிளாஸ் பயன்படுத்துங்கள். மதுபானங்கள் மற்றும் அதிகப்படியான காபி/டீ குடிப்பது உடலில் நீரிழப்பை அதிகப்படுத்தும். எனவே இதை தவிர்க்க வேண்டும்.
இதையும் மீறி ஒருவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டுவிட்டது என்று தெரிந்தால், மருத்துவ உதவி கிடைக்கும் வரை நீங்கள் செய்யும் முதல் 10 முதல் 15 நிமிட கால முதலுதவி தான் அவரது உயிரைக் காப்பாற்ற உதவும்.
முதலுதவி சிகிச்சை
பாதிக்கப்பட்டவரை உடனடியாக வெயில் இல்லாத, காற்றோட்டமான அல்லது ஏசி (AC) உள்ள இடத்திற்கு மாற்றவும். இறுக்கமான ஆடைகள், காலணிகள் மற்றும் சாக்ஸ் ஆகியவற்றைக் கழற்றிவிடவும். முடிந்தவரை மெல்லிய துணிகளை மட்டும் உடலில் விடவும். அதை விட முக்கியம் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க வேண்டும்.
அதாவது, குளிர்ந்த நீரால் நனைக்கப்பட்ட துணியைக் கொண்டு உடல் முழுவதும் துடைக்கவும். குறிப்பாக கழுத்து, அக்குள் மற்றும் இடுப்புப் பகுதி ஆகிய இடங்களில் ஐஸ் கட்டிகள் அல்லது குளிர்ந்த நீர் துணியை வைக்கவும். இங்குதான் ரத்த நாளங்கள் தோலுக்கு அருகில் இருப்பதால் உடல் சீக்கிரம் குளிரும்.
வெப்பத்தை குறைக்க வேண்டும்
டேபிள் பேன் இருந்தால், அதை அவருக்கு அருகில் வைத்து அதிவேகமாகச் சுழல விடவும். இது உடலில் உள்ள நீர்த்துளிகள் ஆவியாகி வெப்பத்தைக் குறைக்க உதவும்.
பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தால், குடிக்க குளிர்ந்த நீரைக் கொடுக்கவும். இளநீர் அல்லது உப்புச் சர்க்கரை கரைசல் இருந்தால் கொடுக்கலாம். அவரை மெதுவாகப் படுக்க வைத்து, கால்களைச் சற்று உயர்த்தி வைக்கவும். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
எதை செய்ய கூடாது?
மயக்கத்தில் இருப்பவருக்குத் தண்ணீர் அல்லது திரவ உணவுகளைக் கொடுத்தால், அது நுரையீரலுக்குள் சென்று உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, வாயில் எதையும் ஊற்ற வேண்டாம்.
ஒருவேளை பாதிக்கப்பட்டவருக்கு வலிப்பு (Seizures) ஏற்பட்டால், சுயநினைவு திரும்பவில்லை என்றால், வாந்தி தொடர்ந்து எடுத்தால், பத்து நிமிடம் முதலுதவி செய்தும் உடல் வெப்பம் குறையவில்லை என்றால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஹீட் ஸ்ட்ரோக் வந்தவர்களுக்குக் காய்ச்சலுக்காகப் போடப்படும் பாராசிட்டமால் போன்ற மருந்துகள் வேலை செய்யாது. எனவே, மருத்துவ ஆலோசனையின்றி மாத்திரைகளைக் கொடுக்க வேண்டாம்.












Click it and Unblock the Notifications