அக்குவேறு ஆணிவேறா! முழு "லிஸ்டோடு" வந்த ஸ்டாலின்! வெலவெலத்த அதிகாரிகள்.. 2 நாளா அப்படி என்ன நடக்குது
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். முதல்வரின் இந்த ஆலோசனைக்கு பின்பாக பல்வேறு முக்கிய காரணங்கள் இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல்நாள் டெல்டா பயணம் முடித்துவிட்டு இரவு சென்னைக்கு வந்தார். டெல்டாவில் உள்ள நீர் நிலைகளை எல்லா வருடமும் தூர்வாருவோம் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டு இருந்தது.
அதன் ஒரு கட்டமாகவே டெல்டா நீர் பாசன வசதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். நம்முடைய அறிவிப்பு சரியாக செயல்பாட்டிற்கு வந்துள்ளதா என்பதை முதல்வர் ஸ்டாலின் நேரில் சோதனை செய்தார்.

மீண்டும் சோதனை
இந்த நிலையில்தான் சென்னை வந்த மறுநாளே.. அதாவது நேற்று முதல்வர் ஸ்டாலின் துறை ரீதியாக பல்வேறு பிரிவு அலுவலர்களை அழைத்து ஆலோசனை செய்தார். நேற்று நகராட்சி, பொதுப்பணித்துறை, மின்துறை, நீர் வளம், நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இருக்கும் அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த துறைகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இரண்டாம் கட்ட ஆய்வு
இன்று இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள துறைகளில் முதல்வர் ஸ்டாலின் கல்வித்துறை மற்றும் உணவுத்துறை ஆகியவை மீது கவனம் செலுத்தி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். அதேபோல் சமூக நலத்துறை சார்பாகவும் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். திமுகவின் முக்கியமான வாக்குறுதிகளில், நீட் வாக்குறுதியும் ஒன்றாகும்., இந்த வாக்குறுதி குறித்தும், அதற்கு மத்திய அரசிடம் எப்படி அழுத்தம் கொடுக்கலாம் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து இருக்கிறாராம்.

என்ன சொன்னார்?
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.. கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். அது இல்லாமல் சட்டசபையில் அறிவித்த மற்ற அறிவிப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். எந்நெந்த துறைகளில் அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ அதன் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் மீது துறை ரீதியாக உடனே நடவடிக்கை எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறாராம்.

கடிந்து கொண்டார்
இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் சில துறை அதிகாரிகளிடம் மிகவும் காட்டமாக பேசியதாக கூறப்படுகிறது. அதாவது சில அறிவிப்புகளை நிறைவேற்றாமல் இருந்த அதிகாரிகளிடம்.. ஏன் மெத்தனமாக இருக்கிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் வைத்ததாக கூறப்படுகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் லிஸ்ட் ஒன்றுடன் கூட்டத்திற்கு வந்துள்ளார்.

தலைமை செயலகம்
தலைமை செயலக அதிகாரிகள் தயாரித்த ரிப்போர்ட் ஒன்றுடன் முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் எந்த துறை அதிகாரிகள் எப்படி செயல்பட்டுள்ளனர். யார் சரியாக செயல்படவில்லை என்ற முழு விவரம் இருக்கிறதாம், இந்த முழு லிஸ்டை வைத்துதான் தற்போது முதல்வர் ஸ்டாலின் துறை ரீதியான அதிகாரிகளிடம்.. அக்குவேறு.. ஆணிவேறா சில டேட்டாக்களை நீட்டி கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறாராம். சில துறை அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு முதல்வர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அடுத்து என்ன நடக்கும்
இதனால் துறை அதிகாரிகள் பலர் வெலவெலத்து போய் இருக்கிறார்களாம். இந்த நிலையில்.. விரைவில் சில துறையில் அதிகாரிகள் மாற்றப்படலாம் என்கிறார்கள். முன்னதாக துறை ரீதியாக உள்ள அதிகாரிகள் சிலர் அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார்கள். அவர்களை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக்கு பின் மாற்ற வாய்ப்புள்ளது என்று ஒன்இந்தியா சார்பாக குறிப்பிட்டு இருந்தோம். இந்த நிலையில்தான் இந்த இரண்டு நாள் ஆலோசனைக்கு பின் முதல்வர் ஸ்டாலின் சில துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications