அரசு பஸ்களில் தமிழ்நாடு என போஸ்டர் ஒட்டும் போராட்டம் அதிகரிப்பு.. பின்னணி என்ன? பெயர் மாற்றம் ஏன்?
சென்னை: அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாததைக் கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அரசுப் பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 2012-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, பேருந்துகளின் பெயர்களை எளிதாகப் படிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது போராட்டம் வெடித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் முக்குலத்தோர் எழுச்சி கழக நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் "தமிழ்நாடு" என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டியதோடு, அதுகுறித்த கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி, தருமபுரி, காஞ்சிபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்களை ஒட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது. அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தமிழ் அமைப்புகளால், இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல இடங்களில் இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசு பேருந்துகளில் அந்தந்த மாநிலங்களின் பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழக அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயர் இடம்பெறவில்லை என்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
ஏற்கனவே இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தபோது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என உள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 2012 கால கட்டத்திலேயே அவர் துவக்கி வைத்த பேருந்திலேயே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று தான் இருக்கிறது.
ஏனெனில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என்பது நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன்பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின்போது மாற்றப்பட்டது." எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications