ஜிஎஸ்டியில் ஏன் இவ்வளவு குழப்பம்.. தயவுசெய்து பாருங்க.. நிர்மலா சீதாராமனை அழைத்து சொன்ன பிரதமர் மோடி
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கூட்டம் நடப்பதற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்தார். ஜிஎஸ்டி முறையை ஒரு தடவை தயவுசெய்து பாருங்கள். வரிவிகிதத்தில் ஏன் இவ்வளவு குழப்பம்? வர்த்தகத்துக்கு எளிதாக அதை மாற்றுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே மாற்றப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. குறைப்பால் விற்பனை அதிகரிக்கும் என்பதால் ரூ.48 ஆயிரம் கோடி இழப்பை இந்த ஆண்டிலேயே ஈடுகட்ட முடியும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. சீர்திருத்தம், 22-ந் தேதி அமலுக்கு வருகிறது. ஜி.எஸ்.டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது வரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி விகிதங்கள், 40% வரிப் பிரிவு இல்லாமல் 5%, 18% என இரட்டை அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால், ரொட்டி, பென்சில், நோட்டு புத்தகங்கள், மருந்துகள், சோப்பு, நாப்கின், வெண்ணெய், காலணிகள், ஆடைகள், உரம், டி.வி., டிராக்டர், கார்கள், மோட்டார் சைக்கிள் என ஏராளமான பொருட்களின் விலை குறைகிறது.

மோடி அழைத்தார்
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலா சீதாராமன் கூறுகையில், "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கூட்டம் நடப்பதற்கு முன்பே பிரதமர் மோடி என்னை அழைத்தார். 'ஜி.எஸ்.டி. முறையை ஒரு தடவை தயவுசெய்து பாருங்கள். வரிவிகிதத்தில் ஏன் இவ்வளவு குழப்பம்? வர்த்தகத்துக்கு எளிதாக அதை மாற்றுங்கள்' என்று என்னிடம் கூறினார்.
மோடி கேட்ட கேள்வி
அதனை தொடர்ந்து பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது பிரதமர் மோடி மீண்டும் எனக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து நினைவுபடுத்தினார். ஜி.எஸ்.டி. குறித்து பரிசீலிக்கிறீர்கள் தானே? என்று என்னிடம் கேட்டார். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், பிரதமர் மோடி கேட்ட பிறகு, ஜி.எஸ்.டி. குறித்து முழுமையாக ஆய்வு செய்ய இதுவே நேரம் என்று நான் கருதினேன்.
ஆய்வு செய்தேன்
வரிஅடுக்கு, வரிவிகிதம் மட்டுமின்றி, வர்த்தகத்துக்கு எளிதாக இருப்பது பற்றியும் ஆய்வு செய்தேன். உதாரணமாக, பன்னுக்கும், கிரீமுக்கும் தனித்தனியாக குறைவான வரி, ஆனால் கிரீம் பன், காரமல் பாப்கார்னுக்கு அதிக வரி போன்றவற்றை மறுஆய்வு செய்தேன். பிப்ரவரி 1-ந் தேதி முதல் மே 15-ந் தேதிவரை நாங்கள் மறுஆய்வு செய்தோம். மே மாத மத்தியில், பிரதமரிடம் சென்று, சீர்திருத்தங்களை நெருங்கி விட்டோம் என்று கூறினேன்.
140 கோடி மக்களுக்கு நன்மை
நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், விளக்கிச் சொல்கிறேன் என்று சொன்னேன். அவரும் நேரம் ஒதுக்கினார். அதை கேட்ட பின்னர், மத்திய அரசின் யோசனையாக அமைச்சர்கள் குழுவிடம் அனுப்ப முடிவு செய்தோம். அதன்படி, அமைச்சர்கள் குழுவும் ஆலோசித்து ஒப்புதல் அளித்தது. பின்னர், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 22-ந் தேதி அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம், மக்களின் சீர்திருத்தம். இதன் மூலம் நாட்டின் 140 கோடி மக்கள் பலன் பெறுவார்கள்.
48000 கோடி இழப்பு
ஜி.எஸ்.டி. வரிகுறைப்பால் ரூ.48 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், வரிகுறைப்பால் 22-ந் தேதியில் இருந்து பொதுமக்களின் நுகர்வு அதிகரித்து விற்பனை அதிகரிக்கும். வருவாய் உயரும். எனவே, ரூ.48 ஆயிரம் கோடி இழப்பை இந்த ஆண்டிலேயே ஈடுகட்ட முடியும் என்று நான் நம்புகிறேன்.
பொருளாதார வளர்ச்சி மாறும்
நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். அந்த இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கறிது. ஆனால் நுகர்வு அதிகரிப்பதால், வளர்ச்சி அதை விட அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது.
நானே கண்காணிப்பேன்
வரும் செப்டம்பர் 22-ந் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. குறைப்பின் பலன்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறதா என்பதை நான் தனிப்பட்ட முறையில் கண்காணிப்பேன். முடிவு வெளியான சில நாட்களிலேயே கார் உற்பத்தி நிறுவனங்கள் முதல் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் வரை, காலணி முதல் ஆடை நிறுவனங்கள் வரை விலைகுறைப்பு அறிவித்திருக்கிறேன். வரிகுறைப்பு அமலுக்கு வரும்போது மற்றவர்களும் விலையை குறைப்பார்கள் என்று நம்புகிறேன்.
ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பை பொறுத்த வரை, அமெரிக்க டாலருக்கு நிகராக மட்டுமே குறைகிறது. மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகராக குறையவே வில்லை. உலக அளவில் டாலர் வலிமை பெற்றதுதான் இதற்கு காரணம். எனவே, கரன்சி மதிப்பை நன்றாக அரசு கண்காணித்து வருகிறது" இவ்வாறு பேட்டியின் போது நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications