"சூப்பர் பவர்".. உதயநிதிக்கு கிடைக்க உள்ள முதல்வரின் முக்கியமான துறை.. ஸ்டாலின் போடும் கணக்கு!
சென்னை: முதல்வர் ஸ்டாலினிடம் உள்ள முக்கியமான துறை ஒன்றை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்க உள்ளதாக ஆளும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்ற செய்திகள் மீண்டும் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தீவிரம் அடைந்துள்ளன. இந்த முறை உறுதியாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று கோட்டை தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் இந்த மாதம் 14ம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதயநிதி
இதில் உதயநிதி ஸ்டாலின் பெறப்போகும் அமைச்சரவை பதவிகள் குறித்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிற்கு விளையாட்டுத்துறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடங்கி பல பணிகளில் நேரடியாக கவனம் செலுத்தினார். அமைச்சர் மெய்யநாதன் உடன் நெருக்கமாக இருக்கிறார். தமிழ்நாடு அரசும் விளையாட்டு துறை மீது கவனம் செலுத்தி வருகிறது. இதனால் அந்த துறை வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமான துறை
மேலும் முதல்வர் ஸ்டாலினிடம் உள்ள முக்கியமான துறை ஒன்றை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்க உள்ளதாக ஆளும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தற்போது முதல்வர் ஸ்டாலினிடம் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் உள்ளன. இதில் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை உள்ளது. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சிறப்பு திட்டங்கள்
அதாவது துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறப்பு திட்டங்களை கண்காணிக்கவும் இந்த துறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க தனியாக ஒரு துறை தமிழ்நாட்டில்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (முதல்வர்) இணைந்து செயல்படுவார்.

சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை
முக்கியமாக வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்பு ஆகிய துறைகள் மீது அதிகம் கவனம் செலுத்துவதற்காக இந்த சிறப்பு துறை உருவாக்கப்பட்டு உள்ளது. கல்வி துறையில் ஒரு சிறப்பு அறிவிப்பை இந்த சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை அறிவிக்கிறது என்றால், கல்வித்துறையோடு இணைந்து அந்த திட்டத்தை சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை செயல்படுத்தும். இதற்காக கள ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஆய்வு கூட்டங்களை நடத்துதல், அறிவிப்புகளை வெளியிடுதல், பணி நியமனங்களை செய்தல் போன்ற பணிகளை செய்ய முடியும். அதோடு ஒவ்வொரு துறையிலும் செயல்படுதப்படும் திட்டங்களை கண்காணிக்க முடியும்.

சூப்பர் பவர்
அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பது தொடர்பாக இந்த துறை ஆலோசனைகளை வழங்க முடியும். அரசின் அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து துறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்பதால் இந்த துறை இத்தனை காலம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்தது. மற்ற துறைகளை கண்காணிக்க வசதியாக இந்த துறை முதல்வரிடம் இருந்தது. கிட்டத்தட்ட இது ஒரு "சூப்பர் பவர்" துறை போல செயல்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அமைச்சராக போகும் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதயநிதி வசம்
இத்தனை நாட்கள் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்த துறை தற்போது உதயநிதி வசம் செல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மற்ற துறைகளுடன் உதயநிதி இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் சீனியர் அமைச்சர்களுடன் உதயநிதி ஸ்டாலின் இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் பல துறைகளில் உதயநிதி அனுபவம் பெறுவதற்கு வசதியாக இந்த துறை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மிகவும் முக்கியமான துறை என்பதால் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் இதில் கவனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர கவனம்
தமிழ்நாட்டில் விளையாட்டு துறையில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. திருச்சியில் பெரிய ஸ்போர்ட்ஸ் சிட்டி ஒன்றை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டு தொடர்களை நடத்த தமிழ்நாடு அரசு முயன்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் போஸ்டிங் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விளையாட்டு துறையுடன் சேர்த்து இந்த சிறப்பு துறையும் உதயநிதிக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது போக மூத்த - செயல்படாத அமைச்சர்கள் சிலரின் (2 பேரின்) பதவி பறிக்கப்படலாம் என்று செய்திகள் வேகமாக பரவின பெரும்பாலும் 7 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்கிறார்கள். சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தேவையின்றி பேசிய அமைச்சர் ஒருவரை பெரிய துறையில் இருந்து சிறிய துறைக்கு மாற்றிவிடலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவரை மாற்றம் செய்துவிட்டு அவரிடம் இருக்கும் துறையை அப்செட்டில் இருக்கும் ஒரு அமைச்சரிடம் கொடுக்கும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications