”இந்தியா” அணியில் மு.க.ஸ்டாலின் பெயரில் “கபடி விளையாடும்” பிரசாந்த் கிஷோர்.. பின்னணியில் அமித்ஷா?
சென்னை: "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சி என்ற அடிப்படையில் திமுகவுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என தொடர்ந்து தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறி வருகிறார். "இந்தியா" கூட்டணியில் திமுக மற்றும் திமுக தலைவரான தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக பிரசாந்த் கிஷோர் முன்னிறுத்துவதன் பின்னணியில் பாஜகதான் கேம் ஆடுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோருக்கும் அரசியல் ஆசை வந்தது. இதனால் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூவில் இணைந்து துணைத் தலைவரானார். பிரசாந்த் கிஷோருக்கு துணைத் தலைவர் பதவி தர காரணமே மத்திய அமைச்சர் அமித்ஷா என பகிரங்கமாகவே சொன்னர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூக பணி என்பதே பிரதமர் மோடியில் தொடங்கியது என்பதை நாடும் அறியும்.

பிகேவின் பணி: இருந்த போதும் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாநில சட்டசபை தேர்தல் பணிகளுக்கு "தொழில் முறை" அடிப்படையில் பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். ஒருகட்டத்தில் நிதிஷ்குமாருடன் மல்லுக்கட்டிக் கொண்டு ஜேடியூவை விட்டு வெளியேறினார். பின்னர் தேர்தல் வியூக வல்லுநர் பணியையே செய்யப் போவதில்லை என்றெல்லாம் சொன்னார் பிரசாந்த் கிஷோர்.

திடீர் தலையீடு: தற்போது திடீரென "இந்தியா" கூட்டணி விவகாரங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். நிதிஷ்குமாரை இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கக் கூடாது என்பதற்கான லாபிகள், பேட்டிகளில் பிரசாந்த் கிஷோர் தீவிரம் காட்டுகிறார். அத்துடன் நிற்காமல் திமுக, திரிணாமுல் காங்கிரஸுக்கு அந்த இடத்தைத் தர வேண்டும் எனவும் லாபி செய்கிறார் பிரசாந்த் கிஷோர்.

பாஜகவுக்கான லாபி: இது என்ன வகையான லாபி என நாம் சீனியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியா" கூட்டணி பொதுவாக பாஜகவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அதேநேரத்தில் வட இந்திய மாநிலம் ஒன்று 'இந்தியா' கூட்டணியின் முகமாக நிறுத்தப்படுவது பாஜகவுக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கும். அதனால் வட இந்தியர் அல்லாத மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி ஒருவரை "இந்தியா" அணி முகமாக நிறுத்தினால் "எதிர்ப்பு" வீச்சு குறைவாக இருக்கும் என்பதுதான் பாஜகவின் கணக்காம். இதனால்தான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மிக நெருக்கமான பிரசாந்த் கிஷோர் திடீரென மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி ஆகியோரில் ஒருவருக்கு இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கலாமே என பல்லவி பாடி வருகிறார் என்கின்றனர். நல்லா கபடி விளையாடுகிறார் பிகே!












Click it and Unblock the Notifications