சீமான் தன் குற்றத்தை மறைக்க கே.டி.ராகவனை ஆதரிக்கிறார்; ஜோதிமணி விளாசல்
சென்னை: நாம் தமிழர் சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன, தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவனின் வீடியோ விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இவருக்கு எதிராக பாலியல் ரீதியான வீடியோ கால் ரெக்கார்ட் ஒன்றை முன்னாள் பாஜக நிர்வாகி மதன் ரவி சந்திரன் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கேடி ராகவன் வீடியோ குறித்து இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்து இருந்தார், அதில், கேடி ராகவன் விவகாரம் தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று. தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதுதான் சமூக குற்றம்.

சீமான்
யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி ராகவன் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம் பிடிப்பது குற்றம். அந்த வீடியோவை வெளியே விடுவதும் குற்றம். அவருடைய அனுமதி இல்லை வீடியோ எடுப்பது தவறு. அவருடைய படுக்கை அறைக்கு, கழிவறைக்கு சென்று வீடியோ எடுப்பது எப்படி சரியாகும். என்ன நடக்கிறது? வீடியோ எடுத்து அதை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.

கண்டனம்
சீமானின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூக சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இவர் இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார் இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு சீமான் போன்றவர்களிடமும் பெண்களும், தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு
இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள், பெண்களை பாலியல்ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள்.
காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள், ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா?

கொடுமைகள்
எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதானிருக்கிறன என்பதை திரு சீமான் நினைவில் அந்த போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்.

தண்டிக்கப்படவேண்டும்
பல்வேறு உளவியல், சமூக, பொருளாதாரத் தடைகளைத்தாண்டி பொதுவாழ்விற்கு வரும் பெண்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும்,பாதுகாப்புடனும் நடத்தப்படவேண்டும் அப்படியில்லாமல் பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் கண்டிக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் இதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தின் கடமை அந்த கடமையைத் தான் தமிழ்சமூகம் சரிவர செய்துவருகிறது.

அயோக்கியர்
பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும், அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது. திரு சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது மேலும் சீமான் பாஜகவின் B Team என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

வெட்கம்
எப்படியிருந்தாலும் திரு. சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கேடி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும், மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications