3 சாதி.. இலவு காத்த கிளியான ’சீனியர்கள்’! லண்டனில் இருந்தே அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்..! பரபர பாஜக
சென்னை: தமிழக பாஜகவில் தற்போது மீண்டும் உட்கட்சி பூசல் முளைத்திருப்பதாக கூறுகின்றனர் சில நிர்வாகிகள். அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்ள ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழக பாஜகவில் அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழகத்தில் அந்த கட்சி எழுச்சி பெற்று இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அண்ணாமலைக்கு எதிராக ஒரு குரூப் அக்கட்சியிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணியை உருவாக்கி அதனை பல இடங்களில் இரண்டாம் இடத்திற்கு வர வைத்தவர் அண்ணாமலை என அவரது ஆதரவாளர்கள் கூறினாலும், அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கு அண்ணாமலை தான் காரணம்.
ஒரு வேளை அந்த கூட்டணி தொடர்ந்து இருந்தால் குறைந்தது 5 முதல் 10 இடங்களிலாவது வென்றிருக்கலாம் என சில தலைவர்கள் கருகின்றனர். இதை அடுத்து அண்ணாமலைக்கு எதிராக கருத்து பேசிய தலைவர்களை சமூக வலைதளங்களில் சில நிர்வாகிகள் விமர்சித்தனர். இதை அடுத்து கட்சிக்குள் மோதல் உருவானதாக கூறப்படுகிறது.
மேலும் கட்சியில் ரௌடிகள் அதிகமாக இருப்பதாக தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழிசை உள்ளிட்டோரை விமர்சித்தவர்களை கட்சியிலிருந்து அண்ணாமலை நீக்கினார். தேசிய தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே அண்ணாமலை அவர்களை நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்ணாமலை தனது அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்று இருக்கிறார். இதை அடுத்து தமிழக பாஜகவில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் உலாவின. இதையடுத்து பல தலைவர்கள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு கட்சிப் பதவியை கைப்பற்ற தீவிரம் காட்டி வந்தனர். ஆனால் மாநில தலைமை மாற்றப்படாமல் கட்சிப் பணிகளை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல எஸ்ஆர் சேகர், கனகசபாபதி, சக்கரவர்த்தி, ராம.சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சூழலில் ஆளுநர் பதவியை துறந்து விட்டு மீண்டும் கட்சிப் பணியில் தீவிரம் காட்டிய தமிழிசைக்கு இடம் வழங்கப்படாதது ஆதரவாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இதேபோல ஏற்கனவே தமிழக பாஜக தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இந்த குழுவில் இடம் இல்லை. இப்போது நியமனம் செய்யப்பட்டிருக்கும் குழுவில் மூன்று பேர் பெரும்பான்மையாக ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும், ஒருவர் ரெட்டியார், இன்னொருவர் நாயுடு, இன்னொருவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த குழுவில் நாடார், வன்னியர், கவுண்டர், தலித் என யாருமே இடம் பெறவில்லை. எனவே சமூக ரீதியாகவும் இந்த குழு முக்கிய நிர்வாகிகளை புறக்கணித்து இருப்பதாக கூறுகின்றனர் நம்மிடம் பேசிய நிர்வாகிகள்.
கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் இரு அணிகள் உருவாகியிருப்பதாகக் கூறியிருந்தாலும், கட்சியின் தலைவரான அண்னாமலையின் கையோ ஓங்கியுள்ளதாகவும், அதன் காரணமாகவே ஒருங்கிணைப்புக் குழுவில் அவரது ஆதரவாளர்கள் இல்லாவிட்டாலும், எதிரணியை இடம் பெறச் செய்யாமல் பார்த்துக் கொண்டார் என்கின்றனர் "சில" நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications