சஞ்சுத்ரா! சம்யுக்தா! அனுராதா! தமிழ்நாடு தேர்தல்களில் இப்படி எல்லாம் நடந்ததே இல்லையே! கவனிச்சீங்களா?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் புதிய திருப்பமாக பல வேட்பாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2 வாரம் முன் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் பல கட்சிகளில் வாரிசு அரசியல் இருந்தாலும்.. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் புதிய திருப்பமாக பல வேட்பாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புமணி குடும்பம்; தருமபுரி லோக்சபா தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக சஞ்சுத்ரா, சம்யுக்தா ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரு வாரமாக தீவிரமாக நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில், எனது அம்மா இந்த தொகுதிக்கு எவ்வளவு நல்லது நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அந்த பயன் இந்த மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றுதான் அவருக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி முழுவதும் இருக்கும் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய போராடுவார். அக்கா, தங்கை என நாங்கள் மூன்று பேரும் இந்த தொகுதியில் இருந்து, தொகுதியின் பிரச்னையை என் அம்மாவிடம் கொண்டு சேர்ப்போம்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தருமபுரியின் தண்ணீர் தேவையை எனது அம்மா தீர்த்து வைப்பார். டாஸ்மாக் கண்டிப்பாக மூடப்படும் என்று டாஸ்மாக் ஒழிப்பு குறித்தும் வாக்குறுதி அளித்து தனது தாய் சௌமியா அன்புமணிக்காக மகள்கள் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
டிடிவி தினகரன்: ஒரு பக்கம் அன்புமணி குடும்பமாக பிரச்சாரம் செய்ய இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார்.
தேனி தொகுதியில் நேற்று டிடிவி தினகரனுக்காக மக்களிடம் வாக்கு சேகரித்தார் அனுராதா. அப்போது, என்னை யார் என தெரிகிறதா? மக்கள் செல்வர் டிடிவி தினகரனின் மனைவிதான் நான்.. தினகரனின் சின்னம் எது தெரியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டபடியே அனுராதா தினகரன் பிரசாரம் செய்தார். அனுராதா அரசியல் களத்தில் புதியவர் என்றாலும் அவரது பிரசார வியூகம் தேனி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சரத்குமார்: இத்தனை காலம் சமத்துவ மக்கள் கட்சி மூலம் அரசியலில் இருந்த சரத்குமார் திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். அவர் பாஜகவில் இணைந்ததோடு இல்லாமல்.. அரசியலில் இல்லாத அவரின் மனைவி ராதிகாவை பாஜக வேட்பாளராக விருதுநகரில் களமிறக்கி உள்ளார்.
பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நிலையில் ஒரே வாரத்தில் விருதுநகர் வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒரு பக்கம் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் பலரும் ராதிகா சரத்குமாருக்கு பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் களநிலவரம் என்னவோ ராதிகாவிற்கு கொஞ்சம் சாதகமாகவும் உள்ளது என்கிறார்கள்.
முக்கியமாக அங்கே உள்ள நாடார் வாக்காளர்கள் பலரும் ராதிகா மீது அனுதாபம் கொண்டு உள்ளனராம். திமுக இந்த முறை நாடார் வேட்பாளர்களை இறக்கவில்லை என்ற அதிருப்தி அந்த ஜாதியினரை இடையே உள்ளது. இது போக நாடார் தலைவர்களை இதுவரை மாணிக்கம் தாகூர் நேரில் சென்று பார்க்கவில்லையாம். ஆனால் ராதிகா சரத் குமார் முதல் நாளே நாடார் தலைவர்களை நேரிடியாக போய் பார்த்து ஆதரவு கேட்டுள்ளார். தனது மனைவிக்காக கணவன் தீவிரமாக அங்கே பிரச்சாரங்களை செய்து வருகிறார்.
எப்போதும் போல இல்லாமல் இந்த முறை லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களின் குடும்பத்தினர் அதிக அளவில் பிரச்சாரங்களில் நேரடியாக களமிறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications