வடை போச்சே... அவரு சொன்னாருன்னு எஸ்.பி.வேலுமணியை கைது செய்யாமல் விடுவதா? ஆதங்கத்தில் கொங்கு திமுக
சென்னை: டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்வார்கள் என எதிர்பார்த்த கொங்கு திமுகவினர் ஏமாற்றமடைந்தனர். அதுவும் அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் சொன்னதால்தான் எஸ்.பி.வேலுமணி கைது செய்யப்படவில்லை என வெளியான தகவலால் அவங்க சொன்னதால் கைது செய்யாமல் விடுவதாக என்கிற ஆதங்கத்தையும் கொங்கு திமுகவினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் ரூ800 கோடி டெண்டர்களில் முறைகேடுகள் செய்தார் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி என்பது திமுகவின் ஆர்.எஸ். பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசின் புகார். இந்த புகார் மீது கடந்த ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தம் மீது அவதூறு பரப்புகிறது அறப்போர் இயக்கம் என எஸ்.பி.வேலுமணி ஒரு வழக்கு போட்டார். அதனை விசாரிக்காமலேயே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அண்மையில் இந்த வழக்கு விசாரணையின் போது, எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இதனையடுத்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பினாமிகளுக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முடக்கப்பட்ட வங்கி கணக்குகள்
இந்த சோதனை கோவையில் நேற்று 2-வது நாளாக நீடித்தது. முதல் நாள் சோதனையில் ரூ13 லட்சம் ரொக்கம், ஹார்ட் டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இன்று எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இந்த வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

வேலுமணி கைதாகலாம் என எதிர்பார்ப்பு
இதனிடையே 60 இடங்களில் சோதனை நடந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டிஜிபி கந்தசாமி திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை கோட்டையில் சந்தித்தார். இதனால் எஸ்.பி.வேலுமணி கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 12 மணிநேர சோதனைகள், விசாரணைகளுக்குப் பின்னர் எஸ்.பி.வேலுமணியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை.

அதிமுக தலைவர்கள் லாபியா?
இந்த நிலையில்தான் அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கேட்டுக் கொண்டதால்தான் எஸ்.பி.வேலுமணியை திமுக அரசு கைது செய்யவில்லை என்கிற ஒரு தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அதிமுக தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையிலும் திமுக அரசை பட்டும் படாமலும் பெயரளவுக்கு கண்டித்திருந்தனர். அதிமுக ஆட்சியில் கொங்கு மண்டலத்தில் நிறையவே ஆட்டம் காட்டிய வேலுமணி கைது செய்யப்படுவார் என்பதுதான் திமுகவினரின் குறிப்பாக கொங்கு திமுகவினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அதிமுக தலைவர் ஒருவர் சொன்னதால் அவர் கைது செய்யப்படவில்லை என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது என நம்மிடம் ஆதங்கப்பட்டனர் கொங்கு திமுக நிர்வாகிகள்.
Recommended Video

கைதுக்கான நடைமுறை என்ன?
இருந்தபோதும் இந்த வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய விவரங்கள் நீதிமன்றத்தில் முதலில் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படும். அதன்பின்னரே சம்மன், விசாரணை, கைது என அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனாலும் எஸ்.பி.வேலுமணியின் கடந்த கால நடவடிக்கைகளால் கொந்தளித்து போயிருக்கும் திமுகவினர், வடை போச்சே.. கைது செய்திருக்கலாமே.. என நடைமுறைகளை அறியாமல் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications