பொங்கல் பரிசு தொகுப்பு.. ரூ.1,000 வழங்கப்படாதது ஏன்.. வந்து விழுந்த கேள்வி! தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. வழக்கமாகப் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் நிலையில், இந்த முறை ரொக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. இது தொடர்பாகப் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும். அதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

பொங்கல் பரிசு:
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் அறிவிப்பில், "2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்று அறிவித்து உள்ளனர்" என்று கூறப்பட்டு இருந்தது.
வழக்கமாகப் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் நிலையில், இந்த முறை ரொக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது கடந்தாண்டு இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையில், தமிழக அரசே தனது சொந்த நிதியைப் பயன்படுத்தியதாகவும் இதனால் கடுமையான நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தங்கம் தென்னரசு:
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் கூறுகையில், "முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி இந்தாண்டு பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான் மக்களிடம் ஒரு விஷயத்தை முக்கியமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்தாண்டு நாம் இரு முக்கிய இயற்கை பாதிப்புகளைச் சந்தித்தோம். மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை உட்பட வட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பெய்த மழையால் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இயற்கை பேரிடர்கள்:
இந்த புயல் பாதிப்புகளுக்குத் தமிழக அரசு ரூ.2 ஆயிரம் கோடி வரை செலவு செய்துள்ளது. பேரிடர் பாதிப்புகளைச் சமாளிக்க நாம் மத்திய அரசிடம் இருந்து நிதி கோரியிருந்தோம். நாம் சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கோரியிருந்தோம். ஆனால், நமக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை 276 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளது.
விளக்கம்:
மத்திய அரசிடம் நாம் அதிக நிதி கோரினாலும் கூட சொற்ப தொகையே கிடைக்கிறது. இருப்பினும், மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிதிச்சுமையைத் தமிழக அரசே ஏற்றது. பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து தான் செலவிட்டு வருகிறோம். இந்த முறை கடுமையான நிதிச் சுமை இருந்தாலும் பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே ரூ.250 கோடி அதற்கு ஒதுக்கப்பட்டது. நிச்சயமாக வரும் காலங்களில் நிதிநிலை சீராகும். இதனால் நல்ல சூழல் விரைவில் ஏற்படும்" என்றார்.
மேலும், தமிழக அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதைப் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்குவது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications