முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்.. வைகோ வீடு தேடிப் போய் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்.. பரபர பின்னணி!
வைகோவை திருமாவளவன் நேரில் சந்தித்த பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திடீரென விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்புக்கு காரணமே திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்களான வேல்முருகன், திருமாவளவன் ஆகியோர் திடீரென ஆவேசமாக பேசத் தொடங்கினர். தமிழ்நாடு அரசு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது என்றார் வேல்முருகன்; திருமாவளவனோ, பதவியை தூக்கு எறியத் தயார் என ஆவேசப்பட்டார். இதனால் திமுக கூட்டணியில் வேல்முருகன், திருமாவளவன் சலசலப்பை ஏற்படுத்துகிறார்களோ என்கிற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் டிவி சேனல் ஒன்றுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு தலைவரான வைகோ குறித்து தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. இதனால் மதிமுக, விசிக இடையே கருத்து மோதல்கள், விவாதங்கள் வெடித்தன. மதிமுகவினர் திருமாவளவன் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது. தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா அவர்கள் இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கு மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்ப்படுத்தி இருக்கிறது எனவும் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் திடீரெம வைகோவை நேற்று திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திருமாவளவன் இருவரும் பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொண்டனர். இது தொடர்பாக நாம் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம். அதாவது இந்த பிரச்சனை தொடர்பாக கூட்டணி தலைவரான முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம். அப்போது, தமிழக தலைவர்கள் யாரையும் பிரபாகரன் நம்பவில்லை என சொல்வது கருணாநிதியையும் சேர்த்துத்தான். இப்படி சொல்வதை திருமாவளவன் தவித்திருக்கலாம் என சுட்டிக்காட்டி இருக்கின்றனர். இதனை மனதில் வைத்திருந்த முதல்வர் ஸ்டாலின், என்எல்சி பிரச்சனையில் தம்மை சந்தித்த போது திருமாவளவனிடம் இது குறித்து சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால் திருமாவளவனோ, பேட்டி ஒளிபரப்பப்பட்டதுமே வைகோவை தொடர்புகொண்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதை விளக்கினேன் என பதில் தந்தாராம் திருமாவளவன். இதில் முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடையாமல் வைகோவை நேரில் சந்தித்து பேசி பிரச்சனையை சுமூகமாக முடியுங்கள் என அறிவுறுத்தினாராம். இதனாலேயே வைகோவை நேரில் சந்தித்து திருமாவளவன் வருத்தம் தெரிவித்தார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications