”நாயகன் மட்டும் மீண்டு வரவில்லை.. ரசிகர்களையும் மீட்டுள்ளான்” விராட் கோலி ஏன் கொண்டாடப்படுகிறார்?
சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான விராட் கோலியின் சதம் அதிகமாக கொண்டாடப்படுவது ஏன்? இது வெறும் கிரிக்கெட் தானே என்று கேட்பவர்கள், விராட் கோலிக்கு பின்னாலும், மக்களின் வாழ்க்கை குறித்தும் கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும்.
ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறினாலும், நாள் முழுக்க கொண்டாடும் வகையில் விராட் கோலியின் சதம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக அடித்த சதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடித்திருந்தார் விராட் கோலி.
இதனைத்தொடர்ந்து 1,020 நாட்களுக்கு பின் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசியுள்ளார். சதம் விளாசிய பின்னர், இந்தத் தொடருக்கு முன் நான் 30 நாட்களாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தேன்.
விராட் கோலி கிரிக்கெட் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக பட்டியலிட்ட காரணங்கள் - ரசிகர்கள் கவலை

விராட் கோலியின் வார்த்தைகள்
கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் இருந்து இவ்வளவு நாட்கள் விலகி இருந்ததே இல்லை. ஓய்வுக்கு பின், மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய போது சதம் விளாசியுள்ளேன். அந்த 30 நாட்களில் எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. எனது சிந்தனை, எனது கண்ணோட்டம், வாழ்க்கை பற்றிய புரிதல், கிரிக்கெட் பற்றிய புரிதல் என அனைத்தும் மாறியது என்று தெரிவித்தார் விராட் கோலி.

இதுதான் கோலி
சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 99.9 சதவிகித கிரிக்கெட் வீரர்களுக்கு, Surviving in the Middle என்பது தான் வேத வாக்கு. என்ன நடந்தாலும் ஆட்டமிழந்துவிடக் கூடாது என்பதே வீரர்களின் முதல் கடமையாக இருக்கும். ஆனால் மீதமுள்ள 0.1 சதவிகித கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட்டிலும், மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே முதல் எண்ணமாக இருக்கும்.

விமர்சனங்கள்
இதில் விராட் கோலி இரண்டாவது ரகம். அதனால் தான் ஒவ்வொரு முறையும், தனது பயிற்சியையோ, தவறுகளையோ, பேட்டிங்கில் செய்த தவறுகளையோ விராட் கோலி ஒப்புக்கொள்ளவே இல்லை. இன்னும் சிலர், ஆணானப்பட்ட சச்சினே, ஒரு போட்டியில் கவர் ட்ரைவ் அடிக்காமல் விளையாடியுள்ளார். விராட் கோலிக்கு ஏன் இவ்வளவு திமிர் என்று நேரடியாக கேள்வி எழுப்பினர்.
இன்னும் சிலர் விராட் கோலியின் பேட்டிங் மந்தமாக உள்ளது, டி20 வகை போட்டிகளுக்கு விராட் கோலி பேட்டிங் ஒத்துவரவில்லை, டி20 உலகக்கோப்பை அணியில் தேவையில்லை என்று விமர்சிக்க தொடங்கினர்.

மீண்டு வந்த நாயகன்
ஆனால் விராட் கோலி யாருக்காகவும் பதில் அளிக்கவில்லை. அவரின் செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருந்தது. ரசிகர்களும் நாயகன் மீண்டும் வருவான் என்று காத்திருந்தனர். இப்போது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் விராட் கோலி அட்டகாசமான கம் பேக்கை கொடுத்துள்ளார்.

இதுவெறும் சதம் மட்டுமல்ல
ஒரு சதம் தானே விளாசி இருக்கிறார். ஏன் இவ்வளவு கொண்டாட வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். சில நேரங்களில் கிரிக்கெட் பொழுதுபோக்கிற்காக பார்க்கப்படும், சில சமயம் த்ரில்லுக்காக பார்க்கப்படும், சில சமயம் புத்துணர்ச்சிக்காக பார்க்கப்படும். கிரிக்கெட் கொடுக்கும் புத்துணர்ச்சியால், சிலர் சொந்த வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்க மன உறுதி கிடைக்கும் என்று கூறுவார்கள். இங்கே பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் சோகமும், கோபமும் இளையோடியுள்ள நிலையில், விராட் கோலியின் சதம் என்ன செய்யும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

வாழ்க்கைக்கான கொண்டாட்டம்
1,020 நாட்கள் காத்திருந்து விராட் கோலி அடித்துள்ள சதம், அவருக்கு மட்டுமானது அல்ல, ரசிகர்களுக்கும் சொந்தமானதாக பார்க்கப்படுகிறது. நாயகன் மட்டும் மீண்டு வரவில்லை. ரசிகர்களாகிய நம்மையும் மீட்டு கொண்டு வந்துள்ளான் என்பதாலேயே இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விராட் கோலியின் சதம் ஆரவாரத்துடன் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.