மக்களே கவனம், அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரம்
சென்னை: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வருகிற 23ம் தேதி வரை நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் அலர்ட் செய்திருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தபடியே உள்ளது.. ராமநாதபுரம் நகரில் நேற்றுகூட மிதமான முதல் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் ஸ்டாண்டு, மருத்துவமனை, பள்ளிகளில் தண்ணீர் தேங்கியால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளானார்கள்.
இதேபோல் முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் காற்று பலமாக வீசி வருவருடன், வழக்கத்தை விட கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டது.
மீனவர்களுக்கு அலர்ட்
வங்கக்கடலில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு கடல் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதேபோல, கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் திருநெல்வேலிக்கு ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை) விடுப்பட்டது. அதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளனர்.. திண்டுக்கல்லிலும் சில நாட்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்கிறது. கடந்த 10 நாட்களாக காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு மேல் தொடங்கி இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது.
அதேபோல பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தீபாவளி விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
அரபிக் கடலில் புதிய காற்றழுத்தம்
இந்நிலையில், அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது..
அதில், "குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை, வரும் 20, 22, 23-ம் தேதிகளிலும் பெரும்பாலான இடங்களிலும், 21-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கனமழை
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், வரும் 20-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications