"பச்சைக்கொடி" காட்டினாரே கருணாநிதி.. இப்போது சாப்பாட்டுக்கே பஞ்சம்.. திருச்சியில் கொந்தளித்த தினகரன்
திமுக அரசை சரமாரியாக விமர்சித்தார் டிடிவி தினகரன்
சென்னை: "கருணாநிதி அன்றைக்கு பச்சை கொடி காட்டினார், இப்போது அரிசிக்கே பஞ்சம் வரும் நிலைமை தமிழ்நாட்டில் வந்துவிட்டது.. திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு இதிலும் கோட்டை விட்டால் வருங்கால சந்ததியினர் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்" என்று டிடிவி தினகரன் திமுக மீது சரமாரியான விமர்சனத்தையும், அதே சமயம் முக்கிய கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையைக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது.. இதற்கு தமிழகம் சார்பில் எத்தனையோ எதிர்ப்புகளை காட்டியும், அதை அந்த மாநிலம் பொருட்படுத்தவே இல்லை.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறேன்.. அணை கட்ட அனுமதி கிடைத்ததும் இந்த வருடமே மேகதாது திட்ட பணிகள் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.

அமமுக ஆர்ப்பாட்டம்
பசவராஜ் பேசிய இந்த பேச்சை கேட்டு, தமிழகமே கொந்தளித்துவிட்டது.. அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில், கர்நாடக அரசைக் கண்டித்து திருச்சியில் அமமுகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 க்கும் அதிகமான அமமுகவினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முடிவை முழுமையாக கைவிட வேண்டும்.திமுக அரசு இதில் முழுமையாக கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

விவசாய சங்கங்கள்
இதில், விவசாய சங்கங்களின் சார்பில் பி.ஆர்.பாண்டியன், அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினர்... நீண்ட இடைவெளிக்கு பிறகு, மக்கள் பிரச்சனையை அமமுக கையில் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிகழ்த்திய உரை பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.. அவர் பேசியதாவது:

காவிரி ஆறு
"தமிழகத்தில் 60% விவசாயம் காவிரி ஆற்றை நம்பியே உள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இங்கு மத்திய அரசு செயல்பட்டு வருகின்றனர்.. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கூட மதிக்காமல் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது கர்நாடக அரசு... இது விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினையில்லை, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, சமூகப் பிரச்சினை ஆகும். தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் இது.

பாகிஸ்தான்
நாம் அவர்களை சகோதர சகோதரிகளாகவே நினைக்கின்றோம். ஆனால் கர்நாடக அரசுதான் நம்மை பாகிஸ்தான் போல பார்க்கிறது.. மேகதாது பிரச்சினையை மத்திய அரசு ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். காரணம் மத்தியில் ஆளும் பாஜகதான், கர்நாடகாவையும் ஆள்கிறது.. தமிழகத்தில் உள்ள திமுக அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதில் முயற்சி எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

கருணாநிதி
திமுக ஆட்சி என்றாலே பயம் தான்... 1970ல் கருணாநிதி ஹேமாவதியில் அணை கட்ட எந்த தடையும் இல்லை என்று பச்சை கொடி காட்டினார்... பின்னர் 1972லும் இப்படியேதான் செய்தார்... அரிசிக்கே பஞ்சம் வரும் நிலைமை இப்போது தமிழ்நாட்டில் வந்துள்ளது... தமிழ்நாட்டு பிரச்சினை என்றாலே அப்போது எல்லாம் கோட்டை விட்டு விடும்... திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு இதிலும் கோட்டை விட்டால் வருங்கால சந்ததியினர் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.

திராவிட மாடல்
ஊராட்சி முதல் மாநகராட்சி வரை மக்கள் வாக்களித்து விட்டு அச்சத்தில் உள்ளனர். திமுகவினருக்கு தான் இது விடியல் ஆட்சி என மக்கள் உணர்ந்து வருகின்றனர். வழக்கம் போல் வசனம் பேசி ஏமாற்றாமல் திமுக செயல்பட வேண்டும்... திராவிட மாடல் ஆட்சியா அல்லது தில்லு முல்லு ஆட்சியா என்பது போல் யோசிக்க வைக்காமல் முதல்வர் ஸ்டாலின் செயல்பட வேண்டும்.. அரசியல் பயணத்திற்காக இந்த போராட்டம் இல்லை.. அமமுக போராட்டத்தில் தோன்றிய கட்சி... எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications