5 வருடம் திமுக இப்படியேதான் கத்தணும்! முதல்வர் விஜய் ஆட்சி பற்றி கேட்டதுமே கஸ்தூரி சொன்னதை பாருங்க
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்புடன் இயங்கி வருகிறது. புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது நிர்வாக செயல்பாடுகளைத் தொடங்கி இருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்புக் குரல்களைக் குறிவைத்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், நடிகை கஸ்தூரி, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி முறை குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எம். ரவி முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியைப் பற்றி அளித்துள்ள பேட்டி நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் சொல்லும்போது, "கட்சி ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த விஜய் கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களை சுலபமாக சமாளிப்பார். தவெக ஆட்சி நீண்ட நாள் நிலைக்காது என்ற விமர்சனத்தை அவசியமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை, அது வெறும் அரசியல் விமர்சனம் மட்டுமே..
100-க்கு 100 மதிப்பெண்
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற முதலமைச்சர் உத்தரவு 100 சதவீதம் பாராட்டுக்குரியது, மக்கள் நலனுக்காக முதல்வர் வழங்கிய முன்னுரிமையை மதிப்பிட்டு கடந்த 10 நாட்களுக்கு ஆட்சிக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் தருவேன் என்றும் தெரிவித்துள்ளார்..
விஜய் அரசு மீதான இந்த பாராட்டு செய்தி அடங்கும் முன்பேயே, நடிகை கஸ்தூரியும் விஜய்யின் அரசை பாராட்டி உள்ளார்.. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்தூரி, "தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி முறையை தி.மு.க. விமர்சிக்கிறது என்றால், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் சரியான பாதையில் செல்கின்றன என்பதற்கான ஓர் அறிகுறியாகவே நான் பார்க்கிறேன்.
பாட்டிலுக்கு 10 ரூபாய்
மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ள தி.மு.க.வினர் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், கவனத்தை ஈர்க்கவும் தொடர்ந்து கத்திக்கொண்டேதான் இருப்பார்கள்..
டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.. குடிபோதையில் இருப்பவர்கள் பொது இடங்களை, குறிப்பாக சாலைகளைக்கூட பார்களாக மாற்றும் அவலநிலை தொடர்வது வேதனை அளிக்கிறது.. இத்தகைய சமூகச் சீர்கேடுகளைத் தடுக்க அரசு எடுக்கும் முடிவுகள் அவசியம்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூலிக்கும் முறை இன்னமும் மாறாமல் இருப்பது, அடிமட்ட அதிகாரிகள் நிலையில் உள்ள மாற்றமின்மையையே காட்டுகிறது.. இது போன்ற நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் முதலமைச்சர் விஜய்க்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
மத்திய அரசுடன் விஜய் மோதல் போக்கு?
புதியதாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் தகுந்த கால அவகாசம் வழங்க வேண்டும்.. பலர் அரசியல் களத்திற்குப் புதியவர்கள் என்பதால், கற்றுக் கொள்வதற்கும் நிர்வாகத்தைச் சீரமைப்பதற்கும் உரிய கால அவகாசம் தேவை.. மாற்றுக் கட்சிகளுக்குப் பலர் கட்சி மாறுவது தமிழக அரசியலில் புதிதல்ல.. அதிமுக ஆட்சிக் காலத்திலும்கூட இத்தகைய கட்சித் தாவல்கள் நடைபெற்றுள்ளன.
மத்திய அரசுடன் முதலமைச்சர் விஜய் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பாரா என்று கேட்கிறீர்கள்.. கொள்கை ரீதியான முரண்பாடுகள் மட்டுமே அரசியலில் பிரதானமே தவிர, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கொள்கை முரண்பாடு இருக்க முடியாது.. மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது கொள்கை என்றால், அதை முதலமைச்சர் விஜய் வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்? அதை எதிர்க்க போவதில்லையே" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்சிக்கு மக்களின் பொறுமையும் ஆதரவும் தேவை என்பதை தனது பேட்டி மூலம் கஸ்தூரி உணர்த்தினாலும், இன்னும் 5 வருடத்துக்கு திமுக கத்திட்டே இருக்க வேண்டியதுதான் என்று பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications