கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் "மீண்டும்" அன்புமணி.. லுலு விடுங்க, "டாக்டர்" சொன்னதுமே டக்னு பார்த்த திமுக
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு குறித்து, முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
கடந்த 2 தினங்களாகவே, கோயம்பேடு லுலு மால் விவகாரம் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கிறது.. தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
லுலு மால்: வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில், மக்களுக்கு சொந்தமான நிலத்தை, பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்று காட்டமாக கூறியிருந்தார்.

அன்புமணியின் இந்த அறிக்கை குறித்து, அமைச்சர் சேகர்பாபு ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார். அதில், "இன்னும் கல்யாணமே ஆகாமல், குழந்தைக்கு பெயர் வைப்பதா? இன்னும் அந்த இடத்தை எந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற முடிவை கூட எடுக்காத நிலையில், துபாயில் உள்ள ஒரு சேக்கை மேற்கோள் காட்டி இருப்பது விசித்திரமாக உள்ளது. இந்த வருஷம் முடியும்வரை அன்புமணியின் பெஸ்ட் ஜோக் இதுதான்" என்று கூறியிருந்தார்.
சமயமூர்த்தி: அதுமட்டுமல்லாமல், அமைச்சர் சமயமூர்த்தியும் ஒரு விளக்கம் தந்திருந்தார். "கோயம்பேட்டில் மொத்தமான 43 ஏக்கர் நிலத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் எந்த பணியை மேற்கொள்ளலாம் என தனி குழு உருவாக்கி, ஆய்வுபணி நடந்து வருகிறது.
அந்த அறிக்கைக்கு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகு, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். ஒரு அரசியல் கட்சியில் இது போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கற்பனையான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தமிழக அரசு: இதோடு நிற்காமல், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் சோஷியல் மீடியா பக்கமான TN Fact Check வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் பிரத்யேகமான விளக்கம் ஒன்றை தந்திருந்தது..
அதில், "கோயம்பேட்டில் லூலூ மால் அமைக்க தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி அரசியல் கட்சியினர் சிலரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயலாகும்!" என்று தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் கோரிக்கை: அன்புமணியின் அறிக்கையையொட்டி, இத்தனை விளக்கங்களும், மறுப்புகளும் தமிழக அரசின் தரப்பில் அடுத்தடுத்து வெளியானதையடுத்து, கோயம்பேட்டில் லுலு மால் என்ற வதந்தி அடிபட்டு போனது.
ஆனாலும் அன்புமணி விடவில்லை.. விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, இப்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளும், பல்வேறு நோய்களும் வருவதற்கு காரணம் உடற்பயிற்சியின்மைதான்..
தேவையில்லை: உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை செய்ய போதுமான இடம் இல்லாததுதான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம்.. அதனால், சென்னை கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட வேண்டும்.. கோயம்பேட்டில் வேறு எந்த கட்டுமானங்களும் வரக்கூடாது... அப்படி வேறு ஏதாவது அமைத்தால் நாங்கள் எதிர்பபோம்.. வணிக வளாகங்கள் எதுவும் எங்களுக்கு தேவையில்லை என்றார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications