தன்மானத்திற்கே இழுக்கு.. போனாலும் சிக்கல்.. போகலைனாலும் சிக்கல்.. சுழலில் மாட்டிய ஓபிஎஸ்.. போச்சே
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.
சென்னை: அதிமுக சார்பாக ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுவார் என்பது உறுதியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி அணியின் தென்னரசு ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு பெரிய பின்னடைவை கொடுத்து உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓ பன்னீர்செல்வம் அரசியலில் மிகப்பெரிய அடியாக மாறி உள்ளது. இந்த இடைத்தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமியை தன் பக்கம் இழுக்கலாம், சின்னம் முடங்குவதாக பிரஷர் கொடுத்து எடப்பாடியை தனது வழிக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அது எதற்கும் அஞ்சுவதாக இல்லை. தொடக்கத்தில் இருந்தே அவர் சின்னம் முடங்குவதை பற்றி எந்த கவலையும் அடையவில்லை.

சின்னம்
சின்னம் போனால் போகட்டும்.. நாம் நமது வேட்பாளரை நிறுத்துவோம் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். பாஜக சார்பாக போய் பேசியும் கூட எடப்பாடி பழனிசாமி தனது வேட்பாளரை பின்வாங்குவதில் விருப்பம் காட்டவே இல்லை. கே. எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கினார். 111 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் நியமித்தார். இதற்கு போட்டியாக ஓ பன்னீர்செல்வம் செந்திலை தனது தரப்பு வேட்பாளராக அறிவித்தார். உடனே சுதாரித்த எடப்பாடி ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தனது தரப்பு வேட்பாளரின் வேட்புமனுவில் தான் கையெழுத்து போட அனுமதி கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கும் தொடுத்தார்.

தேர்தல் ஆணையம்
இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது.

தேர்வு
இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் வாங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். தாக்கல் செய்ததோடு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அவர் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக யார் போட்டியிடுவது என்ற பெரிய குழப்பம் நிலவி வந்தது. ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார்.

என்ன செய்வார்
இந்த நிலையில் தற்போது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. இது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக தென்னரசுவிற்காக நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன், ஆனால் இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வேன் என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார். தற்போது பிரச்சாரக்காரர்கள் லிஸ்டில் கூட ஓ பன்னீர்செல்வம் பெயர் இல்லை. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தன் மானத்தை விட்டுக்கொடுத்திவிட்டு ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

பிரச்சாரம் கேள்வி
இப்போது ஓ பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்தால், கிட்டதட்ட அவர் சுயமரியாதையை விட்டுக்கொடுத்தது போல ஆகிவிடும். சுயமரியாதையை துறந்துவிட்டு அவர் பிரச்சாரம் செய்தது போல ஆகிவிடும். அதுவே ஒ பன்னீர்ச்செல்வம் இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்றால், அது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். தொண்டர்களிடம் இருந்து அவரை அது மேலும் அந்நியப்படுத்தும். அதிமுகவிற்கு பிரச்சாரம் கூட செய்யாதவர் எல்லாம் ஒருங்கிணைப்பாளரா என்ற கேள்வியை உருவாக்கும். போனாலும் சிக்கல்.. போகலைனாலும் சிக்கல் என்ற சுழலில் மாட்டி ஓ பன்னீர்செல்வம் திணறி வருகிறார்.












Click it and Unblock the Notifications