மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா? முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்
சென்னை: சென்னை மாநகரத்திற்குள் மேய்க்கால் மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், ஆட்சேபனைக்குரிய புறம்போக்காக வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா கிடைப்பது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை அளிக்கும் வகையில் தகவலை வெளியிட்டார்.
வேளச்சேரி எம்எல்ஏ
சட்டசபையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.இந்த விவாதத்தின் போது வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மவுலானா பேசுகையில், "பட்டா பெறுவதில் சென்னை போன்ற நகரங்களில் சிக்கல் இருக்கிறது. நகரமயமாக்குதலால் மேய்க்கால் புறம்போக்கு என்று இப்போது கேட்டால் இருக்காது. சென்னை மாநகரத்திற்குள் மேய்க்கால் மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு இருக்கும்போது, எப்படி ஆட்சேபனைக்குரிய புறம்போக்காக வரும்' என்று கூறினார்.

மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இதற்கு பதில் அளித்து பேசுகையில், " இவை எல்லாம் நீதிமன்றம் போட்ட உத்தரவு. நமது அரசு போட்ட உத்தரவு இல்லை. அந்தக் காலத்தில், சென்னையை விரிவாக்கம் செய்யும்போது நிறைய ஆடு, மாடுகள் இருந்தன. மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் நிறைய இருந்திருக்கின்றன. அதனால், ஆவணத்தில் அப்படி இருக்கிறது. அதை நாம் இப்போது மாற்ற வேண்டும் என்றால் நாம் நீதிமன்றத்திற்கு தான் போக வேண்டியிருக்கிறது" என்றார்.
ஸ்டாலின் குட்நியூஸ்
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த பிரச்சினை, சென்னையை ஒட்டியிருக்கக்கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இதுபோன்ற மாவட்டங்களில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, இதுகுறித்து விரைவில் பரிசீலிக்கப்பட்டு, நிச்சயமாக, அனைவருக்கும் வழங்கக்கூடிய நிலையில், பட்டா வழங்கப்படும்" என்றார்.
நீதிமன்றம் தடை
தற்போதைய நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படுகிறது என்றாலும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுவது இல்லை.. மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா தருவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெறுவது சட்டப்படி தவறாக உள்ளது.
பட்டா கிடைக்கும்
இதன் காரணமாக பல ஆண்டுகளாக மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போர் பட்டா வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போதைய நிலையில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து பயன்படுத்துவதற்கு தடை இருக்கிறது.இந்த தடையை நீக்க அரசு முடிவெடுக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் தடை விதிக்காமல் இருந்தால் மட்டுமே பட்டா வாங்க முடியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் மேய்க்கால் புறம்போக்கு நில விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருப்பதால், விரைவில் அவர்களுக்கும் நல்ல செய்தி வர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications