30 நாட்களுக்குள் அமைச்சரவை மாற்றம்? பொன்முடி பரிந்துரைத்த மாற்று.. அந்த எம்எல்ஏ? எல்லாம் மாறுமே!
சென்னை; அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதோடு 3 ஆண்டு சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் அவருக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
( ஏதாவது சொல்ல விரும்புறீங்களா? நீதிபதி கேட்ட ஒரு கேள்வி.. சட்டென பொன்முடி கொடுத்த ரியாக்சன்.. பின்னணி)
வழக்கு பின்னணி இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார். வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தீர்ப்பு என்ன ?: அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
30 நாட்கள் நிறுத்தி வைப்பு: மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது பொன்முடி தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த தாங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தான் உத்தரவு பிறப்பித்ததாக சுட்டிக்காட்டினார். அதற்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன் நடந்த நிகழ்வு அது என்று நீதிபதி பதிலளித்தார்.
தகுதி இல்லை: தொடர்ந்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார். அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மாற்றம் வாய்ப்பா?: அவர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் அவருக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏ வ வேலு உள்ளிட்ட அமைச்சராக்கள் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் உள்ளனர்.

இப்படி சீனியர்கள் சிறைக்கு செல்வது.. வழக்கில் சிக்குவது போன்ற காரணங்களால்.. சீனியர் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு அவர்கள் கட்சி வேலைக்கு அனுப்படலாம்.. அதற்கான யோசனையில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் கோட்டை வட்டார தகவல்கள் வருகின்றன. வரிசையாக மூத்த அமைச்சர்கள் வழக்குகளில் சிக்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக ஆர் லட்சுமணனை தான் சிறை செல்லும் பட்சத்தில் தனக்கு பதிலாக அமைச்சராக்க பொன்முடி பரிந்துரை செய்துள்ளாராம். ஆர். லட்சுமணன் தற்போது விழுப்புரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் ராஜ்யசபாவில் அதிமுக சார்பில் தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அதன்பின் அவர் அதிமுகவில் இருந்து விலகி 2020 இல் திமுகவில் சேர்ந்தார். அவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சிவி சண்முகத்தையே வீழ்த்தியவர் என்பதாலும்.. தனக்கு நெருக்கமாகிவிட்டார் என்பதாலும் இவரை பொன்முடி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications