திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் வேல்முருகன்? என்ன நடக்குது? புட்டு புட்டு வைக்கும் பத்திரிகையாளர்!
சென்னை: சட்டசபையில் நடந்த சலசலப்புகளைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தவாக தலைவர் வேல்முருகன். அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினே நேற்று பரிந்துரைத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை விட்டு வேல்முருகன் வெளியேறுவார் என அரசியல் அரங்கில் பேச்சுகள் எழுந்துள்ளன.

நேற்று சட்டசபையில் நடந்த விவகாரத்தைத் தொடர்ந்து வேல்முருகன், அமைச்சர் சேகர்பாபு மீது கடும் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணியை விட்டு வேல்முருகன் வெளியேறுவாரா? வேல்முருகன் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் நமது ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தாமோதரன் பிரகாஷ் பேட்டி
மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பேசுகையில், "வேல்முருகன் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக எதுவும் சொல்லவில்லை. அதிமுக செய்த மக்கள் விரோத செயல்கள் திமுக ஆட்சியிலும் தொடர்கிறது என சட்டசபையில் பேசும்போதுதான் அமைச்சர் சேகர்பாபு எதிர்ப்பு தெரிவித்தார். அரசியல் என்பதே பணம் தான். சேகர்பாபு - திமுக மோதலுக்குக் காரணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தான். அவரால் கே.என்.நேருவையோ, எவ வேலுவையோ இப்படி பேச முடியாது. உள்ளுக்குள் நடக்கும் வாய்க்கால் தகராறு.
திமுக கூட்டணியை விட்டு போக விருப்பம் என்றால் போகத்தான் சொல்வார்கள். ஆதவ் அர்ஜுனாக இருந்தாலும் சரி, வேல்முருகனாக இருந்தாலும் சரி, தங்களுக்கு குடைச்சல் கொடுப்பவர்கள் அவர்களுக்குத் தேவையில்லை. வேல்முருகனை வைத்துத்தான் திமுக கூட்டணி தமிழ்நாடு முழுக்க ஜெயிக்கப் போகிறதா?" எனக் கூறியுள்ளார்.
சட்டசபை விவகாரம்
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4 ஆம் நாளான நேற்று பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசும்போது, தமிழக அரசின் மொழிக்கொள்கை மற்றும் கல்விக் கொள்கை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, அதிமுக ஆட்சியில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், "வேல்முருகன் பொத்தாம் பொதுவாக பேசுகிறார். அவையில் தவறான தகவலை தெரிவித்துள்ளார். அதனால் அவரது கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்றார். அப்போது அவையை நடத்திய துணை சபாநாயகர் பிச்சாண்டியிடம், பதில் அளிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வேல்முருகன் முறையிட்டார்.
கூச்சலிட்ட வேல்முருகன்
ஆனால், அவையை நடத்திய துணை சபாநாயகர் வாய்ப்பு அளிக்காத நிலையில் தனக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்று கூச்சலிட்டார். உடனே பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கைக்கு வந்து அமர்ந்தார். வேல்முருகனை இருக்கையில் அமருமாறு அறிவுறுத்திய அப்பாவு, அதிமுக ஆட்சி குறித்த வேல்முருகனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
ஆர்.பி.உதயகுமார் கருத்துக்கு பதில் கூற வாய்ப்பளிக்குமாறு வேல்முருகன் தொடர்ந்து கூச்சலிட்டார். அப்போது, "உங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியுமா?" என அமைச்சர் சேகர்பாபு குறுக்கிட்டார். இதையடுத்து அவர் முன்பு சென்று வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆதரவாக மற்ற அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வேல்முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அனைவரும் அமைதி காக்கும்படி கோரிய சபாநாயகர் அப்பாவு, வேல்முருகனை அவரது இருக்கையில் அமரச் சொன்னார். ஆனாலும், வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
கோபப்பட்ட ஸ்டாலின்
உடனே முதல்வர் ஸ்டாலின் எழுந்து, "சபாநாயகர் இருக்கை அருகில் வந்து மிரட்டும் தொனியில் பேசி, அவையை மீறிய செயலில் ஈடுபட்டது வேதனை அளிக்கிறது. அவை விதியை மீறி அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறார். அவையில் வேல்முருகன் கோபமாக பேசினாலும், அதில் குணம் இருக்கும் என்பதால் அவரது பேச்சை அமர்ந்து கேட்பேன். அவையில் கைநீட்டி கூச்சலிடுவது முறையற்ற செயல். அதை அவர் திருத்திக்கொள்ள வேண்டும். அவர் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து அப்பாவு, "முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று எப்போதும் கூறியதில்லை. அமைச்சர்களிடம் கை நீட்டி பேசியது நாகரிகமற்ற செயல். கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்று இதுவரை சந்தித்ததில்லை. இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து மாண்பை குறித்து பேசுவதை ஒருபோதும் ஏற்க இயலாது. இனிமேல் இதுபோன்று யார் நடந்துகொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேல்முருகன் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையடுத்து அவையில் இருந்து வெளியேறினார் வேல்முருகன். வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் என்ன பேச வருகிறேன் என்பதையே புரிந்து கொள்ளாமல், அதிமுகவினரும், அதிமுகவில் இருந்து திமுக அமைச்சாரக இருக்கும் சேகர்பாபுவும் கூச்சலிட்டனர். முதல்வரும் எனது செயலை தவறாக புரிந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications