விஜய்யின் ‘ஆபரேஷன் 12’.. நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? தவெக-வின் ரகசிய மூவ்!
சென்னை: தமிழக அரசியல் களம்ஒரு மிகப்பெரிய அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. 107 இடங்களை வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், 118 என்ற பெரும்பான்மை மேஜிக் நம்பரைத் தொட முடியாததால், காங்கிரஸ் (5 எம்.எல்.ஏ-க்கள்), விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் தவெக அரசு அரியணையில் அமர்ந்தது.
இந்நிலையில், நேற்று மூன்று அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ள விவகாரம், தமிழக அரசியலின் கூட்டணி கணக்குகளை தலைகீழாக மாற்றத் தொடங்கியுள்ளது.

அதிமுக-விலிருந்து விலகியுள்ள 3 எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, நேரடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதே பாணியில், இன்னும் சில அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்யக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக் கட்சிகளுக்குக் கலக்கம் தரும் விஜய்யின் நகர்வு
"ஆட்சி அமைக்கும் வரைதான் தவெக-வுக்கு நம்முடைய தேவை; அதன் பிறகு நிலைமை மாறும்" என்று திரைக்குப் பின்னால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முணுமுணுத்தது இப்போது நிஜமாகத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, ஆட்சி அமைப்பதில் மிக முக்கியப் பங்கு வகித்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த நகர்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இது ஒரு மைனாரிட்டி அரசு, கூட்டணிக் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெறலாம்" என்று கொடுத்த நெருக்கடி, முதலமைச்சர் விஜய்யை தற்காப்பு அரசியலில் இருந்து அதிரடித் தாக்குதல் அரசியலுக்கு மாற்றியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் வளைந்து கொடுத்து ஆட்சி நடத்துவதை விட, தவெக-வை ஒரு 'சுயசார்பு' பலமிக்க கட்சியாக மாற்ற விஜய் திட்டமிட்டுவிட்டார் என்பது தற்போதைய சூழலில் தெளிவாகத் தெரிகிறது.
ஆபரேஷன் அதிமுக: கழற்றிவிடப்படுகிறதா காங்கிரஸ்?
இன்று அரங்கேறியுள்ள மூன்று அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா என்பது ஒரு ஆரம்பம் மட்டும்தான். அதிமுக-வின் அதிருப்தி முகாமில் இருக்கும் மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் தவெக-வின் வலையில் விழுவதற்குத் தயாராக இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 10 முதல் 12 தொகுதிகளில் மறுதேர்தல் (இடைத்தேர்தல்) வருவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகியுள்ளன.
இந்த 12 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிட்டு, தனது சொந்த பலத்திலேயே 118 என்ற பெரும்பான்மை எல்லையைக் கடக்க வியூகம் வகுத்து வருகிறது. அப்படி தவெக-வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அல்லது வெளியில் இருந்து முட்டுக்கொடுக்கும் இடதுசாரிகள், அமைச்சரவையில் உள்ள விசிக-வின் தயவு தவெக-வுக்குத் தேவையற்றதாகிவிடும். "ஆபத்துக் காலத்தில் கைகொடுத்து, நம்பி வந்தவர்களை விஜய் மிக சாதுரியமாகக் கழற்றிவிடப் போகிறார்" என்ற விமர்சனங்கள் இப்போதே எழத் தொடங்கிவிட்டன.
சுய பலமா? துரோக அரசியலா?
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற பழமொழி விஜய்யின் தவெக அரசுக்கும் மிக கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில், தவெக எடுத்துள்ள இந்த அதிரடி குதிரை பேர நடவடிக்கைகள், தற்காலிகமாக தவெக அரசுக்கு பலம் சேர்ப்பது போலத் தோன்றினாலும், நீண்டகாலக் கூட்டணியை நம்பி வந்த கட்சிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.
மறுதேர்தல் நடக்கும் அந்த 10-12 தொகுதிகளிலும் தவெக வென்றுவிட்டால், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தங்களது அரசியல் பேர சக்தியை முழுமையாக இழந்துவிடும். "ஆட்சிக் கட்டிலில் ஏறும் வரை தோள் கொடுத்துவிட்டு, இப்போது சுய பலம் வந்தவுடன் நம்பி வந்தவர்களைக் கழற்றிவிடுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று கூட்டணிக் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் கொதிக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுக, அதிமுக-வை ஒழிப்பதே தங்களின் இலக்கு என்று முழங்கிய தவெக, இப்போது எம்.எல்.ஏ-க்களை இழுப்பதும், கூட்டணிக் கட்சிகளை ஓரங்கட்டுவதுமான பக்கா 'பவர் பாலிடிக்ஸ்' ஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் கூட்டணிக் கட்சிகளின் விதியை மட்டுமல்ல, தவெக-வின் அரசியல் நாணயத்தையும் தீர்மானிக்கும் காரணியாக அமையப் போகிறது.












Click it and Unblock the Notifications