அதிமுக + விஜய்.. தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றம்? கூட்டணி குறித்த கேள்விக்கு வந்து விழுந்த பதில்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும் தவெகவும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுகவின் ஆர்.பி. உதயகுமார் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு மேல் டைம் இருக்கிறது. இருப்பினும், இப்போதே தமிழகத்தில் அரசியல் களம் மெல்லச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

விஜய்:
எப்போதும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும். ஆனால், இந்த முறை விஜய்யின் தவெகவும் கவனம் பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியை ஆரம்பித்த விஜய், மெல்லக் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும், தேர்தலைக் கருத்தில் கொண்டும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கூட்டணி:
இதற்கிடையே விஜய் தனது பேச்சுகளை திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தாலும் அதிமுகவை விமர்சிப்பதைத் தவிர்த்தே வருகிறார். இதன் காரணமாக விஜய் மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. பல அரசியல் வல்லுநர்கள் இரு தரப்பிற்கும் இடையே கூட்டணி அமைந்தால் அது திமுகவுக்குப் பெரிய சிக்கலையே தரும் எனக் குறிப்பிட்டு வருகிறார்கள். இதற்கிடையே கூட்டணி குறித்த கேள்விக்கு அதிமுகவின் உதயகுமார் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

என்ன பதில்:
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியே 2026 தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும். இதற்கு ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுகவின் இரண்டு கோடி தொண்டர்கள் தயாராக உள்ளனர்.
கூட்டணி குறித்த முடிவைப் பொதுச்செயலாளர் அறிவிப்பார். என்னிடம் இது குறித்து கூட்டால் எப்படி! 2026 தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார். திமுக அரசின் செயல்படாத போக்கை தோலுரித்துக் காட்டுவார். அப்போது தான் அதிமுகவின் செல்வாக்கை இந்த நாடும், இங்குள்ள கட்சிகளும் புரிந்து கொள்வோம். அதன் பிறகே கூட்டணிக் கட்சிகள் எங்களை நோக்கி வருவார்கள்" என்றார்.
திமுக மீதும் பாய்ச்சல்:
தொடர்ந்து திமுகவை விமர்சித்துப் பேசிய அவர், யார் அந்த சார், யார் அந்த கார் இப்படி வரிசையாகப் பல விஷயம் வரும். பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். குற்றஞ்சாட்டப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை. அனுதாபி என்கிறார் முதல்வர்.! மாநாட்டில் கலந்து கொள்வார், தேர்தல் பிரச்சாரம் செய்வார் ஆனால் அவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை, அனுதாபி என்றார் யார் தான் நம்புவார்கள்.
அந்த அதிர்ச்சி மறைவதற்குள் இப்போது அடுத்த சம்பவம் நடந்துள்ளது. காந்தி சொன்னது போல இரவு 12 மணிக்குப் பெண் ஒருவர்த் தனியாக வெளியே சென்று திரும்பினால் மட்டுமே நாம் உண்மையாகச் சுதந்திரம் பெற்றதாக அர்த்தம். அப்படிப் பார்த்தால் திமுக ஆட்சியில் தமிழகத்தின் சுதந்திரம் பறிபோய் இருக்கிறது. தமிழக மக்களைப் பாதுகாக்க, உரிமைகளை மீட்டெடுக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர் வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications