எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி எடுத்த "ஒரு முடிவு.." உயிர்த்தெழுந்த அதிமுக-பிரேமலதா புரிந்துகொள்வாரா?
சென்னை: கறுப்பு எம்ஜிஆர் என புகழப்பட்ட "புரட்சிக் கலைஞர்" விஜயகாந்த் மறைந்துவிட்டார்.. விஜயகாந்த் காலத்திலேயே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போன அவர் உருவாக்கிய தேமுதிக இப்போது பிரேமலதா தலைமையில் என்னவாகும்? என்பதுதான் அரசியல் களத்தின் விவாதப் பொருள்.
தமிழ்நாட்டின் அசைக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் தமது அரசியல் வாரிசாக எவரையுமே பகிரங்கமாக அறிவிக்கவில்லை. 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசு யார்? என்கிற 'யுத்தமே' நடந்தது.

தமிழ்நாட்டு மக்களால் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என புகழப்பட்டு கடவுளுக்கு நிகராகக் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா திமுக, வாரிசு யார் என்ற யுத்தத்தில் இரண்டாக பிளவுபட்டது. மக்கள் திலகமாக மக்கள் கொண்டாடிய எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி அம்மையார் அதிமுகவின் ஒரு அணிக்கு தலைவரானர். எம்ஜிஆர் அரசியலுக்கு அழைத்து வந்த போது சீனியர் அதிமுக தலைவர்களால் ஓரம்கட்டப்பட்ட ஜெயலலிதா அதிமுகவின் இன்னொரு அணிக்கு தலைவரானார். பிளவுபட்ட அண்ணா திமுக 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது. 1989-ம் ஆண்டு தேர்தலில் அண்ணா திமுக பெரும் தோல்வியை சந்தித்தது. அப்போது ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுக சுமார் 22% வாக்குகளையும் ஜானகி அம்மையார் தலைமையிலான அண்ணா திமுக சுமார் 9% வாக்குகளையும் பெற்றிருந்தது. திமுக 33% வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
ஜானகி அம்மையாரின் தோல்வி: 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மையார் படுதோல்வியை சந்தித்தார். இத்தனைக்கும் ஜானகி அம்மையார் போட்டியிட்டது எம்ஜிஆர் வென்ற ஆண்டிபட்டி தொகுதியில்தான். 1984-ம் ஆண்டு தேர்தலில் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்து கொண்டே 'படுத்தபடி' எம்ஜிஆர் வென்ற ஆண்டிபட்டி தொகுதிதான் எம்ஜிஆர் மனைவிக்கு 3-வது இடத்தையே தந்தது. 1984-ல் ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் பெற்ற வாக்குகள் 60,510. ஆனால் 1989-ல் அவரது மனைவி ஜானகி அம்மையாருக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 22,647 மட்டுமே. ஜானகி அணிக்கு ஒரு இடம்தான் கிடைத்தது. எம்ஜிஆர் மறைவால் ஏற்பட்ட அத்தனை அனுதாபதங்களும் ஜானகிக்கு ஓட்டாக கிடைக்காமலேயே போனது.
ஜானகியின் அதிரடி முடிவு: 1989-ம் ஆண்டு சட்டசபை பெருந்தோல்விக்குப் பின்னர் ஜானகி அம்மையார் அதிரடியான ஒரு முடிவை எடுத்தார். அண்ணா திமுகவை அப்படியே ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து அரசியலில் இருந்து முற்று முழுதாக விலகிவிட்டார். இதனால் அண்ணா திமுக மீண்டும் ஒருங்கிணைந்த கட்சியாக விஸ்வரூபம் எடுத்து தமிழ்நாட்டில் இன்று ஜெயலலிதா இல்லாத போதும் பிரதான எதிர்க்கட்சியாக வலிமையோடு திகழ்கிறது.

முதல் தேர்தலில் மிரட்டல்: தேமுதிகவை எடுத்துக் கொண்டால் 2005-ல்தான் கட்சியை தொடங்கினார் விஜயகாந்த். மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் களத்தில் வலிமையாக இருந்த போது அவர்களுக்கு எதிரான மாற்று சக்தியாக தேர்தல் அரசியலில் களமிறங்கினார் விஜயகாந்த். 2006 சட்டசபை தேர்தலில் தனித்தே 232 தொகுதிகளில் முரசு, மோதிரம் சின்னங்களில் போட்டியிட்டது தேமுதிக. அத்தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வென்றார். தேமுதிக முதல் தேர்தலிலேயே சுமார் 8.3% வாக்குகளைப் பெற்று அசரவைத்தது.
எதிர்க்கட்சியாக தேமுதிக: தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக விஜயகாந்தின் தேமுதிக வலிமை பெற்ற கட்சியாக விஸ்வரூபம் காட்டியது. இதனால் 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு அதீதமான முக்கியத்துவம் கிடைத்தது. அந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் கை கோர்த்தார் விஜயகாந்த். அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29-ல் வென்றது. அத்தேர்தலிலும் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 7.8% ஆக இருந்தது. 22.39% வாக்குகளைப் பெற்ற திமுகவுக்கு 23 இடங்கள்தான் கிடைத்தன. இதனால் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தும் கூட தேமுதிகவுக்கு கிடைத்தது. இது இன்னமும் தேமுதிகவின் வலிமையை உறுதிப்படுத்தியது. ஆனால் தேமுதிகவுக்கு இந்த வெற்றியும் காத்திருந்த பிரகாசமான எதிர்காலமும் நீண்டகாலம் நிலைக்கவில்லை என்பதுதான் வரலாறு.
கட்சியை சிதைத்த பிரேமலதா: அதிமுக- தேமுதிக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. தேமுதிக சிதறத் தொடங்கியது. அப்போது தேமுதிகவில் இருந்து வெளியேறியவர்கள் பலரும் மறக்காமல் உச்சரித்த பெயர்தான் 'பிரேமலதா' விஜயகாந்த். தேமுதிகவை தொண்டர்கள், ரசிகர்களின் கட்சி என்ற நிலைமையை மாற்றி கிச்சன் கேபினட் கட்சியாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மைத்துனர் சுதிஷ் உருமாற்றி சின்னாபின்னமாக்கி வைத்திருந்தனர். இவர்களது ஆதிக்கமும் 'குடும்ப' கட்சி என்ற மனநிலையும் தேமுதிகவை தள்ளாடவைத்தது.
தேமுதிகவுக்கு கொள்ளி வைத்த பிரேமலதா: 2016 சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு 'டிமாண்ட்' அதிகமாக இருந்தது. அத்தேர்தலில் இயல்பாகவே திமுக கூட்டணியில்தான் தேமுதிக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் தலையீடு அல்லது அதீத ஆசையின் காரணமாக 'மக்கள் நல கூட்டணி'க்கு போனது தேமுதிக. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக கூட பிரகடனம் செய்யப்பட்டார். ஆனால் பிரேமலதா தம்மை முன்னிறுத்தி களம் கண்ட முதல் தேர்தல் தேமுதிக எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு ஆகப் பெரிய கொள்ளியாக இருந்தது என்பது பெரும் துயரம்தான். அத்தேர்தலில் 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு வெறும் 2.41% வாக்குகளே கிடைத்தன. இத்தகைய பெருந்தோல்விக்குப் பின்னர் விஜயகாந்த் உடல்நலன் பாதிக்கப்பட தேமுதிக முற்று முழுதாக பிரேமலதா வசமானது. ஏற்கனவே தேமுதிகவில் இருந்து விஜயகாந்தின் அதி தீவிர ரசிகர்கள், தொண்டர்கள் பலரும் கொத்து கொத்தாக துரத்திவிடப்பட்ட நிலையில் விஜயகாந்த் எனும் மனிதர் மீது அளப்பரிய பற்றும் பாசமும் கொண்டவர்கள் மட்டுமே அதுவும் பிரேமலதா தலைமையானாலும் பரவாயில்லை என ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே தேமுதிகவில் எஞ்சி நின்றனர்.
முடிவுரை எழுதிய பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன்: 2021 சட்டசபை தேர்தல் களத்தில் விஜயகாந்துடன் அவரது மகன் விஜய பிரபாகரனும் இணைந்து கொண்டார். அம்மா பிரேமலதாவும் மகன் விஜய பிரபாகரனும் தேர்தல் அரசியலை அபத்தமாக, அமெச்சூர்தனமாக, கத்துக்குடித்தனமாக எனும் எத்தனை வேண்டுமானாலும் சொல்லும் அளவுக்கு கையாண்டனர். தமிழ்நாட்டு சரித்திரத்திலேயே இருக்கிற அத்தனை கட்சிகளுடனும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியவராக விமர்சிக்கப்பட்டார் பிரேமலதா. கடைசியில் ஏதோ ஒரு கூட்டணி, கிடைத்தால் போதும் என்கிற பரிதாப நிலையில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டார் பிரேமலதா. அப்போது விஜயகாந்த் முற்றிலும் களத்தில் நிற்காத நிலைமைதான். 2021-ம் ஆண்டு தேர்தலில் தேமுகவின் சொற்ப வாக்கு வங்கியும் காணாமல் போய் நோட்டாவை விட மோசமான வாக்கு சதவீதம் பெற்றது. 2021 தேர்தலில் தமிழ்நாட்டில் யாருக்கும் வாக்கு இல்லை என்கிற நோட்டா பெற்றது 0.7% வாக்குகள். தமிழ்நாட்டில் திமுகவை மிரள வைத்து எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக பெற்ற வாக்குகள் வெறும் 0.48%. தேமுதிக என்கிற கட்சிக்கு முற்று முழுதாக முடிவுரை எழுதி வைத்தார் என்ற பெருமை பிரேமலதாவை மட்டுமே சேரும்.
விருத்தாசலத்தில் டெபாசிட் இழந்த பிரேமலதா: 2021 தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார். விஜயகாந்த் 61,337 வாக்குகள் பெற்ற தொகுதி; 2 முறை தேமுதிக வசம் இருந்த தொகுதி விருத்தாசலம். அதனால் அத்தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டார். ஆனால் டெபாசிட்டையே பறிகொடுத்து விருத்தாசலத்தில் தோற்றுப் போனார் பிரேமலதா.
பாஜக அரவணைப்பில் தேமுதிக: தற்போது விஜயகாந்த் இல்லை.. தற்போது விஜயகாந்தின் அதீதமான ரசிகர்கள் கட்சியிலும் இல்லை. தற்போது தேமுதிகவை முழுமையாக நம்பக் கூடிய பிரதான கட்சிகள் எதுவும் இல்லை. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தேமுதிகவரை அரவணைத்துக் கொள்ளக் கூடிய ஒரே கட்சி பாஜகதான். 2021 சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் 2.62% . மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் அதிமுக கூட்டணி தயவில் பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். இப்போது அதிமுகவும், பாஜகவை கழற்றிவிட்டிருக்கிறது. நிர்கதியாக களத்தில் நிற்கும் பாஜகதான் 'கேப்டனை' இழந்த தேமுதிகவுக்கு ஆறுதலாக இருக்கிறது. விஜயகாந்த் மறைந்துவிட்ட தருணத்திலாவது பிரேமலதா கொஞ்சம் அனுசரணையாக, கள யதார்த்தங்களைப் புரிந்தவராக நடந்து கொண்டால் விஜயகாந்த் மறைவின் பேரனுதாபத்தை அறுவடை செய்துவிடக் கூடிய நிலைமை இருந்தது. விஜயகாந்த் உடல் மண்ணுக்குள் இறக்கப்பட்ட சில நொடிகளிலேயே மைக் பிடித்து 'இந்த நல்ல நாளில்' என பிரேமலதா பேசிய போதே விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டிருந்த ஆகப் பெருமளவிலான அனுதாபம் அத்தனையும் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட குழியிலேயே பிரேமலதாவாலேயே ஆழப் புதைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் யதார்த்தம்.
என்ன செய்ய வேண்டும் பிரேமலதா?: எம்ஜிஆர் மறைந்த போது ஜானகி அம்மையார் கணவரின் கட்சியை காப்பாற்ற விஷப் பரீட்சைக்கு தயாரானார். அந்த பரீட்சையில் தாம் தோற்றுப் போய்விட்டோம் என்பதை ஒப்புக் கொண்டு கவுரவமாக அரசியலைவிட்டே விலகிப் போய்விட்டார் ஜானகி. விஎன் ஜானகி அம்மையாரின் அந்த ஒற்றை முடிவுதான் இன்றைக்கும் அதிமுகவை வலிமையாகவும் உயிர்ப்போடும் வைத்திருக்கிறது. ஆனால் பிரேமலதாவின் மாற்றவே முடியாத போக்குகள் "இருண்ட காட்டில்" கிடக்கும் தேமுதிகவுக்கு ஒருநாளும் ஒற்றை ஒளிக்கீற்றைக் கூட காண்பித்துவிடவே முடியாது என்பதை பிரேமலதாவே புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் விஜயகாந்த் எனும் மகத்தான மனிதர் உருவாக்கிய தேமுதிக களத்தில் பேசக் கூடியதாக இருக்கும்.. இல்லையெனில் 'காணாமல் போன' கட்சிகள் பட்டியலில்தான் "கேப்டன்" விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக இருக்கும்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications