கோடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமியின் ‘சாட்சியம்’.. 6 ஆவணங்களில் ரெடி.. ஐகோர்ட்டில் தகவல்!
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவை வழக்கறிஞர் ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியது, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தனபாலுக்கு கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பற்றி பேச நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு பதிலாக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பதிவுசெய்ய அனுமதிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார்.
சாட்சியம் சொன்ன எடப்பாடி பழனிசாமி.. விரைவில் ஐகோர்ட்டில் தாக்கல்! ஜன.12 விசாரணைக்கு வருகிறது வழக்கு!
இந்த மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியப்பதிவு நடைமுறையை மேற்கொள்ள வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தது. அதன்படி ஜனவரி 4ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சாட்சியப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன் ஆஜராகி, எட்பபாடி பழனிசாமியிடம் சாட்சியப்பதிவு நடைமுறை முடிந்து விட்டதாகவும், 6 ஆவணங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications