மருத்துவத்துறையில் டாப்! சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.65 கோடியில் பிரமாண்ட கட்டடம்!
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது நரம்பியல் துறை கட்டிடம்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.65 கோடி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டடத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனை. பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்து வகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. 2,500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 10,000 முதல் 15,000 பேர் புறநோயாளிகளாக வருகை தந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் அமையப் பெற்றுள்ள இந்த அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரையின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை விரைந்து செயல்படுத்திடும் பொருட்டு 65 கோடி ரூபாய் அனுமதித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கட்டடம் ஏறத்தாழ 1 லட்சத்து 12 ஆயிரத்து சதுர அடியில் (10,428 ச.மீ.) நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்தக் கட்டடத்தில் தரைத் தளத்தில் நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன் மருத்துவ பிரிவு போன்ற வசதிகள்அமையும்.
முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்காம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட 6 அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை போன்ற வசதிகள் இடம்பெறுகின்றன.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் இந்தக் கட்டடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 4 மின்தூக்கிகள், 2 படிக்கட்டுகள், சாய்வுதளம், மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த நரம்பியல் துறை மருத்துவ சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications