உலகத்திலேயே இந்தியா நம்பர் ஒன்.. இதுல பெருமைப்பட ஒன்னுமே இல்லை! மோசமான சாதனையால் நாட்டுக்கே ஆபத்து
சென்னை: உலகளவில் வதந்திகளால் அதிக ஆபத்துகளை சந்திக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளதாக உலக பொருளாதார மன்றம் தெரிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் ஊடகத் துறைக்கு பெரும் சவாலாக திகழ்ந்து வருவது போலி செய்திகள். குறிப்பிட்ட மதம், இனம், மொழி, தேசத்துக்கு எதிராக வெறுப்பை பரப்பும் கருவியாக இந்த வதந்திகள் இருந்து வருகின்றன. எடிட் செய்யப்பட்ட போட்டோஷாப் படங்கள், பழைய செய்திகள், வெட்டி ஒட்டப்பட்ட வீடியோக்கள், ஏஐ மூலம் எடி செய்த படங்கள், வீடியோக்கள் போன்றவை சமூக வலைதளங்களில் உண்மை செய்திகளை விட அதிவேகத்தில் பரப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான வன்முறைகளும் வெடித்து உள்ளன.

இந்தியாவிலும் வதந்திகள் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகின்றன. சிறுபான்மையினர், பட்டியலின மக்களுக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியின் மீது அவப்பெயர் ஏற்படுத்த வதந்திகளை ஆயுதமாக எடுக்கின்றர். பெரும்பாலான கட்சிகளின் ஐடி விங்குகள் அவதூறுகளையும், வெறுப்பு பிரச்சாரங்களையுமே மேற்கொள்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் வகையில் FACT CHECK என்ற பெயரில் நமது ஒன் இந்தியாவிலும் பொய்யான செய்திகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் உலக பொருளாதார மன்றம் உலக நாடுகள் சந்திக்கப்போகும் ஆபத்துகள் தொடர்பாக பல்வேறு துறை சார்ந்தவர்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி 2024 ஆம் ஆண்டு இவ்வுலக மக்கள் ஏதிர்கொள்ள வேண்டிய 34 ஆபத்துகளை உலக பொருளாதார மன்றம் பட்டியலிட்டு இருக்கிறது. அதில் வதந்திகளும் முக்கிய இடத்தை பிடித்து இருக்கின்றன. கல்வி, வணிகம், அரசு துறை சார்ந்த 1,490 நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்து இருக்கிறது.
இதில் வேதனையளிக்கும் தகவல் என்னவென்றால் வதந்திகளின் காரணமாக அதிக ஆபத்துகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நமது இந்தியா. அமெரிக்கா 6 வது இடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் 8 வது இடத்திலும், இங்கிலாந்து மற்றும் மெக்சிலோ ஆகிய நாடுகள் 11 வது இடத்தை பங்கு போட்டுக்கொண்டு உள்ளன. இந்தோனேசியா இந்த பட்டியலில் 18 வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 22 வது இடத்திலும் உள்ளது. ரஷியா, சீனா ஆப்பிரிக்க நாடுகளில் இந்த பிரச்சனை குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உண்மை ஊரை சுற்றுவதற்குள் பொய் உலகை சுற்றி வந்துவிடும் என்பதைபோல் வேகமாக சமூக வலைதளங்கள் பொய்கள் பரவி மக்களை அறியாமை என்னும் இருளில் மூழ்கடித்து விடுகின்றன. ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் வீடியோவை கூட நம்ப முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மக்களாகிய நாம் ஒரு செய்தியை, தகவலை பகிரும் முன் ஒன்றுக்கு பல முறை யோசித்து ஆய்வு செய்து பகிர்வது சரி. இல்லாவிட்டால் வதந்தி பரப்பும் கும்பலில் நாமும் சேர்ந்துவிடுவோம்.












Click it and Unblock the Notifications