World Idly Day 2025: சர்வதேச இட்லி தினம் இன்று.. 'நம்ம உணவு' இட்லிக்கும் இத்தனை சுவாரசிய வரலாறுகளா?
சென்னை: சர்வதேச பாப்கார்ன் தினம், சர்வதேச அப்பளம் தினம் என அனைத்து உணவு பண்டங்களுக்கும் ஒரு சர்வதேச தினம் இருக்கிறது.. தமிழ்நாட்டின் தேசிய உணவாகவே அறியப்படுகிற நம்ம 'இட்லி'க்கும் இன்று சர்வதேச தினம்.. ஆம் இந்த மார்ச் 30-ந் தேதிதான் சர்வதேச இட்லி தினமாக கொண்டாடப்படுகிறது.
இட்லிக்கும் சர்வதேச தினம் எங்கே இருந்து உருவானது தெரியுமா? அட நம்ம சென்னையில்தான்! சென்னையில் இனியவன் என்பவர்தான் 2015-ம் ஆண்டு சர்வதேச இட்லி தினத்தை அறிமுகப்படுத்தி கொண்டாடினார். இவருக்கும் இட்லிக்கும் என்ன தொடர்பு? கோவையைச் சேர்ந்த இனியவன், மல்லிகைப்பூ இட்லி வழங்குவதில் மன்னாதி மன்னர்; 120க்கும் மேற்பட்ட வெரைட்டி இட்லிகளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தவர். கடந்த 10 ஆண்டுகளாக இவரது புண்ணியத்தில்தான் நம்ம இட்லியும் சர்வதேச தினத்தை கொண்டாடி தீர்க்கிறது.

நம்மோட பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் இட்லி என நினைத்து கொண்டாடி மகிழும் நமக்கு இட்லி குறித்து சில சுவாரசியமான ஆச்சரியமான தகவல்களும் காத்திருக்கிறது மக்களே!
ஆமாம்.. இட்லி என்பது நம்ம ஊர் உணவே இல்லையாம். அரிசியை அதிகமாக விளைவிக்கக் கூடிய இந்தோனேசியாதான் இதன் பூர்வீகம் என்கிற கருத்தும் பலமாகவே உண்டு.
அதேநேரத்தில் இன்றைக்கும் இட்லியில் வெரைட்டிகளை அறிமுகப்படுத்தி கலக்கிக் கொண்டிருக்கும் சவுராஷ்டிரா மக்களின் கண்டுபிடிப்புதான் இட்லி என்கிறவர்களும் உண்டு. திண்டுக்கல் பக்கத்தில், சவுராஷ்டிரா சமூகத்தின் சமையல் கலைஞர்கள், அறிமுகப்படுத்துகிற இட்லி வெரைட்டிகளை பார்க்கும் போது இவர்கள்தான் ஆதி கண்டுபிடிப்பாளர்களோ என்கிற சந்தேகம் வந்துதான் ஆகுமே!
வழக்கமாக இட்டாரிகா என்கிற வடமொழிச் சொல்லில் இருந்து வந்ததுதான் இட்டாரிகா என்கிற புனைவுக்கும் பஞ்சமில்லைதான். கன்னட மொழி இலக்கிய நூலில்தான் இட்லி குறித்த முதல் குறிப்பு இடம் பெற்றுள்ளது என்போரும் உண்டு.
இட்லி தினம் வந்ததும் வந்தது.. சமூக வலைதளங்களில் இட்லி தின டிரோல்கள், இட்லி தின மீம்கள், இட்லி தின கவிதைகள் எதற்கும் பஞ்சமும் இல்லை.. இட்லி தினத்தை முன்னிட்டு சைவ ஹோட்டல்களிலும் அதிரிபுதிரி அறிவிப்புகளுக்கும் குறைவும் இல்லை!
இட்லி குறித்து நெட்டிசன் ஒருவரின் கவிதையை பாருங்கள்..
"ஆவியால் அவித்த அழகி
ஆளையே மயக்கும் நழுவி
ஆகாயம் பூலோகம்
அயல்நாடு உள்நாடு
எங்கெங்கு தேடினாலும்
கிடைக்காது உன்னைப் போல
ஒரு சுவையான நிறமி..
கூட்டாளிகளுக்குத் தகுந்தபடி
தன்னிலை மாற்றும் மாயாவி...
சட்னியானாலும்
சாம்பாரானாலும்
மிளகாய்ப் பொடியானாலும்
அனைவரோடும் ஒத்துப்போகும்
தன்னிகரில்லாத் தலைவி...
நிலாவைப்போல வெள்ளை
உன் ருசிக்கு இல்லை எல்லை...
அனைத்து
சத்துக்களையும்
உள்ளடக்கியும்
தலைக்கனம் ஏறாத
மிருது உள்ளம்...
தமிழ்நாட்டு
காலை உணவின் கெத்து...
"இட்லியே" நீ தான்
எங்க பரம்பரை சொத்து...
*மார்ச் - 30 :*
*உலக இட்லி தினம்.*
இட்லி கவிஞர் @kpvenkat02












Click it and Unblock the Notifications