ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டில் ஏசியில் போகலாம்.. ரயில் டிக்கெட் புக் பண்ணும் போது இதை பண்ணுங்க போதும்
சென்னை: ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டில் ஏசி 2ஆம் வகுப்பில் பயணம் செய்ய ஆட்டோ அப்கிரடேஷன் வசதியை ரயில்வே மேம்படுத்தி உள்ளது. ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் எடுத்துவிட்டு வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்கு ஏசி கோச் 2 ஆம் வகுப்பில் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது Consider for auto Upgradation- என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். இதை டிக் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பயணிகளின் தேவைக்கேற்ப ரயில்வே வாரியம் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

ஆட்டோ அப்கிரடேஷன்
அந்த வகயில்தான், ரயில் பெட்டிகளில் உயர் வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கீழ் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது, சாதாரண பெட்டியில் 2-ம் வகுப்பில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 3-ம் வகுப்பு குளிர்சாதன வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணம் இன்றி அவர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளில் இருக்கை வழங்கப்படும்.
இந்த நடைமுறை 2006-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தில் மத்திய ரயில்வே வாரியம் சில மாற்றத்தை செய்துள்ளது. அதாவது, சாதாரண பெட்டியில் 2-ம் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி மட்டுமில்லாமல், 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடம் இருந்தாலும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
2 ஆம் வகுப்பு ஏசி பெட்டிக்கும்
அதேபோல, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணமின்றி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இந்த திட்டம் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது.
இதனால், ரயில்களில் உயர் வகுப்பு பெட்டிகளில் காலி இருக்கைகள் இல்லாமல் கீழ் வகுப்பு பயணிகளை கொண்டு நிரப்புவதால் ரயில்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் பயணிகளுக்கு ரயில்களில் உயர் வகுப்புகளில் கட்டணமின்றி உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் கிடைக்கும் என மத்திய ரயில்வே வாரியத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
இந்த வசதியை பயணிகள் பெற வேண்டும் என்றால் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது முக்கியமான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். அதாவது, ஆன்லைன் முன்பதிவு என்றால், டிக்கெட் புக்கிங் செய்யும் போதே Consider for auto Upgradation- என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். இதை டிக் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான், மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் காலியிடங்கள் இருந்தால் அதற்கு டிக்கெட் அப்கிரேடு செய்யப்படும். இந்த நடைமுறை ரயில் டிக்கெட் புக்கிங் சிஸ்டமில் ஆட்டோமெட்டிக்காக செயல்படும். எனவே, பயணிகள், இந்த வசதியை பெற வேண்டும் என்றால் ஆட்டோ அப்கிரேடேஷன் வசதியை செலக்ட் செய்து கொள்ள வேண்டும். இதற்கு கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது.
மறக்காமல் இதை செய்யுங்க
ஆட்டோ அப்கிரடேஷன் ஆப்ஷன் தேவையில்லை என கொடுத்தால் இப்படி டிக்கெட் ஏசி வகுப்புகளுக்கு மாற்றப்படாது. ஒருவேளை நீங்கள் எந்த ஒரு ஆப்ஷனும் கிளிக் செய்யாமல் இருந்தால், நீங்கள் யெஸ் சொன்னதாக கருதி ஆட்டோ அப்கிரடேஷனுக்கு மாற்றப்படும், எனினும், அந்த ஆப்ஷனை கிளிக் செய்தவர்களுக்கே முதலில் முன்னுரிமை கிடைக்கும். எனவே ரயிலில் டிக்கெட் புக் செய்யும் போது மறக்காமல் இந்த ஆட்டோ அப்கிரடேஷன் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications