முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தீங்களே அதை வாபஸ் வாங்குங்க.. காவல் அதிகாரி பேசும் ஆடியோவால் பரபர
சென்னை: தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்த ஆறுமுகம் என்பவரை தொடர்பு கொண்டு பேசும் அண்ணா நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர், முதல்வர் தனிப்பிரிவில் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றால்தான் விசாரணை நடத்த முடியும் என்ற ரீதியில் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சியை தொடர்பு கொண்டுள்ளார்.
சென்னை அண்ணாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிராவல் ஏஜெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ரத்னேஸ்வரன் என்பவர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அதற்காக ரூ. 12.25 லட்சம் பணமும் கேட்டு இருக்கிறார்.

முதல்வரின் தனிப்புகாரில் மனு
இந்த பணத்தை பல்வேறு தவணைகளில் ஆறுமுகம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த மோசடி தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் உள்ள காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகாரின் பேரில் பல ஆண்டுகளாக வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்து வந்தாக சொல்லப்படுகிறது. இதனால், கடும் மன வேதனை அடைந்த ஆறுமுகம் முதல்வரின் தனிப்புகாரில் மனு கொடுத்துள்ளார்.

மனுவை வாபஸ் பெற வேண்டும்
முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்த பிறகு இந்த வழக்கின் விசாரணை தொடங்கியதாக தெரிகிறது. இதற்கிடையில் புகார் அளித்த ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு பேசும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் நிலைய அதிகாரி ஒருவர், முதல்வர் தனிப்பிரிவில் அளித்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அப்படி செய்தால்தான் தன்னால் தொடர்ந்து வழக்கை விசாரிக்க முடியும் என்ற தொனியில் பேசுகிறார். இது தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பிறகு விசாரணையை தொடங்கலாம்
ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு பேசும் காவல்துறை அதிகாரி ஒருவர், புகார் தொடுக்கப்பட்டுள்ள நபருக்கு எதிராக சிடிஆர் போடப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து விடலாம். நீங்கள் முதல்வர் தனிப்பிரிவில் அளித்த புகார் மீது நடவடிக்கை வேண்டாம் என்று ஒரு கடிதம் மட்டும் கையெழுத்து போட்டு கொடுங்கள்... அதன்பிறகு விசாரணையை தொடங்கிவிடலாம் என்று சொல்கிறார்.

வாபஸ் பெற வைப்பதில்தான்
இதற்கு பதிலளிக்கும் ஆறுமுகம், வழக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால்தான் முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்தேன். தற்போது தான் விசாரணை தொடங்கியிருக்கிறது. மனுவை வாபஸ் பெற்றுவிட்டால் மீண்டும் விசாரணையை கிடப்பில் போடப்படுமோ? என பயமாக இருக்கிறது" என்று பதில் கூறுகிறார். ஆனால், ஆறுமுகத்தை விடாமல் வலியுறுத்தும் அந்த காவல் அதிகாரி, காவல் நிலையத்திற்கு தினமும் வாருங்கள், என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி முதல்வர் தனிப்பிரிவில் அளித்த புகாரை வாபஸ் பெற வைப்பதில்தான் குறியாக இருக்கிறார். இந்த ஆடியோ தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications