பள்ளி சிறுவன் மீது பாய்ந்த மின்சாரம்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்.. சென்னையில் நெகிழ்ச்சி
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் மழைநீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து துடித்த பள்ளி சிறுவனை காப்பாற்றிய இளைஞரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சிறுவனை காப்பாற்றிய இளைஞர் செய்தி தொலைக்காட்சிக்கு உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாங்காளி நகரில் கடந்த 16 ஆம் தேதி கனமழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. அப்போது 3 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தேர்வு முடித்து வீடு திரும்பி உள்ளார். அப்போது சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த மின் மீட்டர் பெட்டியில் இருந்து வொயர்கள் கீழே கிடந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் மழை நீரில் நடந்து சென்ற மாணவன் அதன் மீது மிதித்ததால் மின்சாரம் பாய்ந்துள்ளது.

சிறுவனை காப்பாற்றிய இளைஞர்
மின்சாரம் தாக்கித் துடித்த பள்ளிச் சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி உள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கண்ணன் என்ற இளைஞர், சிறுவன் மின்சாரம் தாக்கி துடிப்பதைப் பார்த்துள்ளார். உடனே தன் உயிரைப் பணயம் வைத்து அந்தத் சிறுவனை மீட்டு முதலுதவி செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்போது அந்த பள்ளி மாணவன் மருத்துவமனையில் நலமாக உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. பள்ளி மாணவன் உயிருக்கு போராடுவதும் அந்த வழியாக வந்த இளைஞர் கண்ணன் தைரியமாக, தனது உயிரைப் பற்றி கவலையின்றி துரிதமாக செயல்பட்டதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பள்ளிச் சிறுவனை உயிரை காப்பாற்றிய அந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மழைநீரில் மின்சார கசிவு
அரும்பாக்கம் மாங்காளி நகரில் சில நாட்களுக்கு முன் தான் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது மழை பெய்ததால் சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின் மீட்டர் பெட்டி சரியாக மூடவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே மழை நீர் தேங்கி இருந்தபோது மின் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தண்ணீரில் மின்கம்பி விழுந்திருந்தது தெரியாமல் அதனை மிதித்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்ட இளைஞர் கண்ணன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், "அன்று காலையில் இருந்து நல்ல மழை பெய்த நிலையில், பல இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது.
உருக்கமாக பேட்டி
பள்ளி சிறுவனை முதலில் பார்த்த போது மழை நீரில் வழுக்கி விழுந்து விட்டார் என்று நினைத்தேன். அருகில் சென்று பார்த்த போது தான் மின்சாரம் பாய்ந்து துடிப்பது தெரிந்தது. உடனே உதவிக்கு மற்றவர்களை அழைத்து பார்த்தேன். யாரும் வரவில்லை. பின்னர் நான் அந்த சிறுவனை தொட்டு பார்த்த போது என் மீது மின்சாரம் லேசாக பாய்ந்தது. பிறகு சட்டென அவரை இழுத்து விட்டேன்.
என் உயிரா? சிறுவன் உயிரா?
பிறகு சிறுவனுக்கு முதலுதவி கொடுத்து நானே மருத்துவமனையில் சேர்த்தேன். மின்சாரம் என் மீதும் பாயும் என்று தான் இருந்தது. ஆனால் என் உயிரா இல்லை.. அந்த பையன் உயிரா எனப் பார்க்கும் போது அந்த பையனைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தென். அன்று அந்த சிறுவனை காப்பாற்றவில்லை என்றால் அதுவே வாழ்நாள் முழுவதும் எனக்கு குற்ற உணர்வாக இருந்திருக்கும்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications