வைகை ரயிலில் படிக்கட்டில் பயணித்த இளைஞர்.. சைதாப்பேட்டை ஸ்டேஷனில் நடந்த சோகம்.. பதைபதைக்கும் வீடியோ
சென்னை: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் அமர்ந்து பயணித்த கடலூரை சேர்ந்த இளைஞர் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கீழே விழுந்து பலியாகியுள்ளார். பிளாட்பார்மில் கால் மோதியதில் நிலைதடுமாறி விழுந்த இளைஞர் சுமார் 200 மீட்டர் தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டு ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் கண்டமங்களம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சென்னை அத்திப்பட்டு புதுநகரில் உள்ள டர்னல் பவர் பிளாண்டில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.30 மணியளவில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. முன்பதிவில்லா பெட்டியில் பாலமுருகன் பயணித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெட்டியில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் பாலமுருகன் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக பாலமுருகனின் கால் பிளாட்பார்மில் பட்டுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் சைதாப்பேட்டை ரயில் நிலைய பிளாட்பார்மில் விழுந்தார். அதோடு சுமார் 200 மீட்டர் தூரம் அவர் இழுத்து வரப்பட்டார். ரயில் சென்ற வெகத்திற்கு இணையாக தரதரவென இழுத்து வரப்பட்ட பாலமுருகன் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி உயிரிழந்தார். நொடிப்பொழுதில் நடந்த இந்த விபத்தில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணரவைக்கும் வகையில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதாவது படியில் பயணம் நொடியில் மரணம் என்பதற்கு இணங்க இந்த விபத்து அரங்கேறியுள்ளது. ரயிலில் விபத்துக்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது. எனினும் ஒரு சில நேரங்களில் இது போன்ற விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன.
முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏறுவதால் தான் படியில் அமர்ந்து பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது என்றும், எனவே முன்பதிவில்லா பெட்டிகளில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றக்கூடாது என்றும் பயணிகள் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications