சென்னை கிண்டியில் இளைஞரின் உயிரை பறித்த சாலை பள்ளம்.. பேஜ்ஒர்க் செய்த மாநகராட்சி!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா சாலையில் பள்ளம் காரணமாக இளைஞர் தடுக்கி விழுந்து பேருந்தில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலானநிலையில், இறப்புக்கு காரணமான பள்ளத்தை மூடி சரிசெய்துள்ளது சென்னை மாநகராட்சி.
Recommended Video
சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கி மாநகர அரசு பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சின்னமலை வழியாக நேற்று காலை 8.40 மணியளவில் சென்றது . அப்போது அதே வழியாக இரு சக்கர வாகனத்தில் ராமாபுரத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் (31) இளைஞர் (ஐ.டி ஊழியர் ) வந்து கொண்டிருந்தார்.
வேலைக்கு சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் சின்னமலை பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, தனியார் விடுதிக்கு எதிரே சாலையில் உள்ள மழை நீர் தேங்கி நின்றது.

அரசு பேருந்து
அதில் இருந்த பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறியுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதினார்

உயிரிழப்பு
அதில் விபத்து ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த முகமது யூனுஸ்சின் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியுள்ளது. இதனால் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன நடந்தது
இதனிடையே சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. சாலையில் இருந்த பள்ளம் மற்றும் மழைநீர் காரணமாக நிலை தடுமாறி பேருந்தின் இடையே சிக்கி சம்பவ இடத்தில் முகமது யூனுஸ் உயிரிழந்தது உறுதியானது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வைரலான நிலையில், சாலைகளின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.

மாநகராட்சி செயல்
சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடி சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இளைஞரின் உயிரை பறித்த சாலையில் இருந்த பள்ளத்தை மூடி அந்த பகுதியில் ரப்பீஸ்களை (கற்கள் குவியலை போட்டு) போட்டு பேஜ்ஒர்க் செய்துள்ளது சென்னை மாநகராட்சி. ஆனால் இதனால் பள்ளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் இது தீர்வு அல்ல. ஏனெனில் அடுத்த சில நாளில் பள்ளம் வந்துவிடும். எனவே நிரந்தரமாக சாலைகளை செப்பனிட வேண்டும். இதனிடையே உயிரை பறிக்கும் பள்ளம் உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி உடனே சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எமனாகும் பள்ளம்
இருசக்கர வாகனத்தில்செல்வோர் திடீர் பள்ளத்தில் நிலைகுலைந்து விபத்தில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அரசு உடனே இநத் விஷயத்தில் உறுதியான தெளிவான உத்தரவுகளை சாலை அமைக்கும் ஒப்பந்ததார்களுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications