எதே உயிருக்கு ஆபத்தா? “ஏமாத்திட்டங்க.. அவமானம்” - நீயா நானாவில் பங்கேற்ற யூடியூபர்கள் கொந்தளிப்பு
சென்னை: அண்மையில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற யூடியூபர்கள் பலர் தங்களிடம் சொல்லிய தலைப்பை வைக்காமல் வேறொரு தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தி தங்களை அவமானப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
விஜய் டிவியில் பிரபலாமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான நீயா நானா எனப்படும் விவாத நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் வாரந்தோரும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

டிக்டாக், யூடியூபர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி
அந்த வகையில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி "சமூக ஊடகத்தில் செல்பிரெட்டி ஆக முயற்சிப்பவர்கள் VS விநோதமாக முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லும் சொந்தமும் சுற்றமும்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் ஒரு பக்கத்தில் டிக் டாக்கில் விநோதமாகவும், நகைச்சுவையாகவும் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு வீடியோ வெளியிடுபவர்கள் மற்றும் பல்வேறு தகவல்கள், விமர்சனங்கள், சோதனைகளை செய்து வீடியோ வெளியிடும் யூடியூபர்கள் அமர்ந்திருந்தனர். மற்றொரு புறம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அமர்ந்திருந்தனர்.

விமர்சனம்
இந்த நிகழ்ச்சியில் தங்களை தாங்களே தாழ்த்திக்கொண்டு வீடியோக்களை வெளியிடுவதால் ஏற்படும் பாதிப்புகள், குடும்பத்தார்கள், நண்பர்கள் சந்திக்கும் அவமானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர்களே அதிகம் பேசியதாகவும் யூடியூபர்கள் பெரும்பாலும் பேசவில்லை என்ற கருத்து நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக யூடியூபர்களாக இருப்பதே தவறுதான் என்ற கண்ணோட்டத்தை அது ஏற்படுத்தியதாக பலர் தெரிவித்து இருந்தனர்.

யூடியூபர்கள் குற்றச்சாட்டு
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யூடியூபர்கள், தங்களிடம் வேறு தலைப்பை சொல்லி அழைத்து வந்து, நிகழ்ச்சியில் மற்றொரு தலைப்பை வைத்து விவாதம் செய்ததாக குற்றம்சாட்டி இருக்கின்றனர். தங்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நீயா நானாவுக்கு அழைத்த ஏற்பாட்டாளர்கள், மற்ற யூடியூபர்களை பரிந்துரைக்க சொன்னதாக கூறுகிறார் இதில் பங்கேற்ற Simply Waste யூடியூப் சேனலை நடத்தும் கபிலன்.

மாறிய தலைப்பு
கல்லூரி தேர்வுகளுக்கு மத்தியில் நீயா நானாவில் கலந்துகொள்ள திருப்பூரிலிருந்து சென்ற தனக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சிக்கு சென்ற தங்களை நீண்ட நேரம் காக்க வைத்ததாகவும், தங்களுடன் டிக் டாக்கில் வீடியோ போடுபவர்களையும் ஒன்றாக அமர வைத்து பொதுமைப்படுத்தி பேசியதாக அவர் கூறியுள்ளார். அங்கு வந்த தங்களிடம் தலைப்புகளை கேட்டபோது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பை சொல்லி இருப்பதாக அவர் கூறினார்.

உயிருக்கு ஆபத்தானால்..
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தங்களிடம் ஒரு தாளில் கையெழுத்து பெற்றதாகவும், அதில் "இந்த நிகழ்ச்சிக்கு வரும்போதோ அல்லது நிகழ்ச்சியில் இருக்கும்போதோ உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை" என்று குறிப்பிட்டு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் டிக்டாக்கர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இடையேதான் பல மணி நேரம் விவாதம் நடைபெற்றதாக அவர் கூறி இருக்கிறார்.

நீயா நானாவுக்கு எதிராக வீடியோக்கள்
மைக்கை வாங்கி "டிக்டாக்கர்கள் வேறு, யூடியூபர்கள் வேறு. நாங்களும் அவர்களும் ஒன்று இல்லை, வேறு தலைப்பை சொல்லி எங்களை அழைத்து வந்துவிட்டனர்." என்று தான் பேசியதாகவும் அதை எடிட் செய்து நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் தமிழன், பீயிங் நிஜார், ஒய் சகா, ஆகாஷ் ஜெ என பல யூடியூபர்கள் நீயா நானா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து உள்ளார்கள்












Click it and Unblock the Notifications