சிந்தெடிக் போதைப் பொருட்களின் புகலிடமா மாறிப்போச்சு.. தமிழக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை: சிந்தெடிக் போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் போதைப்பொருள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஜாபர் சாதிக் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு போதைப் பொருள் விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை செய்ததில், சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான கொக்கைன், எம்டிஎம்ஏ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரில் நான்கு பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் ரூபாய் 22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு அதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாஃபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது. தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களைக் கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டைப் போதைப் பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது.
சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாகத் தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாகச் செயல்படுமாறு இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications