"குப்பையில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலி".. 3 தூய்மை பணியாளர்களால் நெகிழ்ந்த கோவை.. கடவுள் மனசுங்க
கோவை: கோவையில் குப்பையில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை எடுத்து அதன் உரிமையாளரிடம் பெண் தூய்மை பணியாளர்கள் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட அடுத்தவரின் நகைக்கு ஆசைப்படாத அந்த தூய்மை பணியாளர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் சிவகாமி. இவர் தனது 6 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் தான் திடீரென்று அந்த பிளாஸ்டிக் கவர் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்த அந்த பிளாஸ்டிக் கவரை தேடினார்.

ஆனால் எங்கு தேடியும் அந்த பிளாஸ்டிக் கவர் கிடைக்கவில்லை. அப்போது தான் ஒருவேளை பிளாஸ்டிக் கவரை யாராவது குப்பை என்று நினைத்து வீசியிருக்கலாம் என்று நினைத்தார். இதையடுத்து குப்பைகளில் தங்க சங்கிலியை தேட அவர் முடிவு செய்தார். இதற்காக அவர் மாநகராட்சி கவுன்சிலரின் உதவியை நாடினார்.
சிவகாமி வசித்து வரும் ஏரியா கோவையின் 98 வது வார்டுக்கு உட்பட்டது. இந்த வார்டு கவுன்சிலராக இருப்பவர் உதயக்குமார். இதையடுத்து சிவகாமி, கவுன்சிலர் உதயக்குமாரை அழைத்து நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்திரி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.
கோவைப்புதூரில் சிவகாமி வசிக்கும் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பையில் நகை அடங்கிய பிளாஸ்டிக் பை இருக்கிறதா? என்பதை அவர்கள் தேட தொடங்கினர். சுமார் 1 டன் எடை கொண்ட குப்பையை கிளறி கிளறி தூய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்ரி ஆகியோர் தேடினர். பலமணிநேர தேடுதலுக்கு பிறகு சிவகாமியின் 6 பவுன் தங்க செயின் கிடைத்தது. இதையடுத்து 3 தூய்மை பணியாளர்களும் அந்த நகையை சிவகாமியிடம் ஒப்படைத்தனர்.
நகையை பெற்று கொண்ட சிவகாமி கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு செல்லும்படி கூறினார். முன்னதாக நகை மாயமானபோது அவர் தனது வீட்டில் இருந்தவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நகையை ஒப்படைக்கும்போது, ‛‛சந்தோஷமாங்கம்மா.. அழுகாதீங்க அம்மா.. மாநகராட்சி பணியாளர்களை எந்த காரணம் கொண்டு சந்தேகப்படாதீங்க. இந்த பகுதியில் உள்ள 4 வீட்டில் உள்ளவர்களும் இணைந்து சிசிடிவி கேமரா வைத்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
நீங்கள் போலீசில் புகார் செய்திருந்தால் அதனை வாபஸ் வாங்கிவிடுங்கள். எந்த உதவியாக இருந்தாலும் போன் செய்யுங்கள். நீங்கள் உங்களின் மருமகளை திட்டி இருப்பீங்க என்று நினைக்கிறேன். அவர் தான் பயந்துபோய் உள்ளார். ஏம்மா அழுகுறீங்க.. கஷ்டப்பட்டு சம்பாதித்தது எப்போதும் எங்கேயும் போகாதுங்க'' என அட்வைஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் குப்பையில் கிடந்த நகையை 3 தூய்மை பணியாளர்கள் தேடி உரியவரிடம் ஒப்படைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் பலரும் தூய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்ரி ஆகியோரை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications