40க்கு 40 வெற்றி.. இது திராவிட மாடல் அரசு மீதான மக்களின் திருப்தியை காட்டுகிறது.. பூரித்த ஸ்டாலின்
கோவை: தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது என்பது திராவிட மாடல் ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் திருப்தியின் அடையாளம் என்று கோவையில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்து வருகிறது.

இந்த விழாவில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்களின் பேச்சை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த பாராட்டு விழா என்பது எனக்கு மட்டுமானது அல்ல. இங்கு உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்குமானது. 40க்கு 40க்கு என்ற இந்த தேர்தல் வெற்றியை தொண்டர்களான உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன். இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. நம் அரசு மீது நம்பிக்கை கொண்ட மக்கள் தந்த வெற்றி. 2004ம் ஆண்டு 40க்கு 40 வெற்றியை கருணாநிதி பெற்று தந்தார். ஆளும் கட்சியாக அதிமுக இருந்தது.
தோல்விக்கான காரணத்தை உணர்ந்து ஜெயலலிதா மக்கள் விரோத நடவடிக்கையில் இருந்து பின்வாங்கினார்கள். இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டனர். அதற்கு அவர் இது 41வது வெற்றி என்றார். 2004 கருத்து கணிப்பில் வாஜ்பாய் தான் ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடித்தது. இப்போதும் அதேமாதிரி தான். பாஜக அதே அடிப்படையில் 400 இடங்களை கைப்பற்றும் என்றார்கள். ஆனால் அதனை உடைத்து பாஜகவால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை புரட்சியாளர் அம்பேத்கரின் சட்ட புத்தகத்தின் முன்பு தலைகுனிந்து வணங்க வைத்திருக்கோம். இதை தலைவர் கருணாநிதி பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி. 2004ல் நாம் 40க்கு 40 வென்றபோது ஜெயலலிதா மீதான அதிருப்தியால் கிடைத்தது வெற்றி என்றார்கள்.
ஆனால் இப்போது கிடைத்திருக்கும் 40க்கு 40க்கு வெற்றி என்பது திராவிட மாடல் ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் திருப்தி. இதனை யாரும் சொல்லமாட்டார்கள். நமது தொடர் வெற்றிக்கு காரணம் என்ன? கொள்கை உறவோடு கடந்த 5 தேர்தல்களில் தொடரும் கூட்டணி ஒற்றுமை தான் நமது வெற்றிக்கு காரணம். இந்த மேடையில் உள்ள தலைவர்கள் இடையே இருப்பது வெறும் கூட்டணி உறவு அல்ல. கொள்கை உறவு.












Click it and Unblock the Notifications