வால்பாறை அருகே சோகம்.. சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுவன் பரிதாப பலி!
கோயம்புத்தூர்: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சிறுத்தை தாக்கி கொன்றிருக்கிறது.
வால்பாறை பகுதியில் உள்ள வேவர்லி எஸ்டேட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இன்று இரவு ஒரு தொழிலாளியின் 8 வயது மகன் நூருல் இஸ்லாம் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கியுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு இருக்கின்றனர். இதனால் மிரண்ட சிறுத்தை சிறுவனை தூக்கிக்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கிறது. உடனடியாக மக்கள் போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். மறுபுறம் சிறுவனை தேடி அலைந்திருக்கின்றனர். சிறுவன் கடுமையான காயங்களுடன் புதர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறான்.
உடனடியாக அவனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர்.
வால்பாறை பகுதியில் மனிதர்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே இதேபோன்று வடமாநில தொழிலாளர் ஒருவரின் குழந்தையை சிறுத்தை தாக்கி கொன்றிருக்கிறது. எனவே இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிறுத்தைகளின் உணவு லிஸ்ட்டில் மனிதர்கள் கிடையாது. ஆனால் காயமடைந்த, வயதான வேட்டையாட முடியாத சிறுத்தைகள் எளிதான டார்கெட்டை குறி வைக்கும். அப்போதுதான் அது மனிதர்களைs தாக்குகின்றன. ஒருமுறை மனிதர்களை தாக்கி ருசி கண்டுவிட்டால், மீண்டும் மீண்டும் அது மனிதர்களை தாக்குகின்றன. எனவே அது ஆட்கொல்லி சிறுத்தையாக மாறுகின்றன. அதற்கு முன்னர் அதை பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications