16 இடங்களில் பெட்ரோல் குண்டு! பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதம்.. களமிறங்கிய காவல்துறை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில் பொள்ளாச்சியில் மேலும் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல்நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த 22ம் தேதி பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதே போல கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல "இது போன்ற சம்பவங்களை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்" என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக பொள்ளாச்சியில், இந்து அமைப்பின் நிர்வாகி ஒருவரின் வீட்டின் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வாகனங்களுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைக்கவும் முயற்சி நடந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது.
சுமார் 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 500 மேற்பட்ட செல்போன் எண்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதனை அடிப்படையாக கொண்டு, பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மூவரை கைது செய்தனர். மேலும், கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மூவரையும் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு அதனையடுத்து பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது ஆகியவை பொள்ளாச்சியில் பெரும் பதற்றதை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையை நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் நிலையில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல்நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் எழுதியுள்ள சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது, "பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரியல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும்." என குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக, எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ குமரன் நகர் என எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தபால் மூலம் வந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications