மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை அடியோடு மாறுது.. 2.5 கோடியில் புதிய பாலம்.. அதிகாரிகள் குட்நியூஸ்
கோவை: கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சாலை வழியாக ஊட்டிக்கு பலரும் செல்கிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான நகரில் இருந்து வரும் மக்கள், மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி மற்றும் நீலகிரி மாவட்டம் செல்ல மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாலை நான்குவழிச்சாலையாகிறது. அங்கு ரூ.2.5 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை 4 மாதங்களுக்குள் முடிக்க நெடுஞ்சாலை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு கோவை மாவட்டம் வழியாகவே பலர் செல்வார்கள். அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு செல்லவும், கர்நாடகாவின் மைசூர் செல்லவும் மேட்டுப்பாளையம் சாலையை பயன்படுத்துகிறார்கள். எனவே மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை வாகன போக்குவரத்தில் முக்கியமானதாக இருக்கிறது.

நான்கு வழிச்சாலை
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையை பொறுத்தவரை 10 மீட்டர் அகலம் கொண்டது. குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதை ஏற்று மாநில நெடுஞ்சாலைத்துறை 16.2 மீட்டருக்கு அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 38 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவினாசி வரை செல்லும் அந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.226 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பதற்காக இருபுறமும் இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டிருக்கிறது
தொடர்ந்து நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் ரஜினிகாந்த், ஆனந்தகுமார், உதவி பொறியாளர்கள் பூபாலன், சுகுமாரன், வத்சலா ஆகியோர் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது சாலை மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எத்தனை பாலங்கள்
மேட்டுப்பாளையத்தில் இருந்து குமரன் குன்று வரை 7 சிறு பாலங்களும், 7 பெட்டி பாலங்களும் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது குமரன் குன்று பகுதியில் இருந்து அன்னூர் வரை 10 பெட்டி பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அன்னூரில் இருந்து அவினாசி வரை சிறு பாலங்கள் மற்றும் பெட்டி பாலங்கள் அமைக்கும் பணியும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
17 ஆயிரம் மரங்கள் நடப்படும்
அவினாசி முதல் மேட்டுப்பாளையம் வரை பணிகள் முடிந்த பகுதியில் அழகு செடிகளுடன் கூடிய சென்டர் மீடியன் மற்றும் தார்சாலை அமைக்கப்படுகிறது. அத்துடன் நடூர் பாலம் அருகே ரூ.2.5 கோடி மதிப்பில் 30 மீட்டர் நீளம், 7½ மீட்டர் அகலத்தில் புதிய பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்து வருகிறது. அதற்கு இடையூறாக இருந்த குடிநீர் குழாய்களை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் அமைக்கிறார்கள் சாலை மேம்பாட்டு பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடியும் என தெரிகிறது. 4 மாதங்களுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications