இருங்க பாய்.. AI தொழில்நுட்பத்திடம் எகத்தாளம் காட்டிய அந்த உருவம்.. ஆனைகட்டியில் என்னனு பாருங்க
கோவை: கோவை, ஆனைகட்டியை அடுத்த கோபனாரி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் எழுப்பிய சைரன் ஒலியை சிறிதும் சட்டை செய்யாமல் கெத்தாக ஒற்றை யானை ஒன்று மின் வேலியைத் தாண்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். தமிழகத்தில் இருந்து, கேரளத்துக்கும், கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கும் யானைகள் இடம்பெயர்வது வழக்கம். மலையையொட்டிய பகுதிகளில் மட்டுமே சுற்றித் திரிந்த இந்த யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தற்போது நுழையத் தொடங்கியுள்ளது.

வனப் பகுதிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, யானை வழித்தடங்களில் கட்டடங்கள் கட்டுவது போன்ற விதிமுறைகளை மீறிய செயல்பாடுகள் காரணமாக யானைகள் ஊருக்குள் புகுந்து வரும் சம்பங்கள் தொடர்ந்துஅரங்கேறி வருகின்றன. அவ்வாறு ஊருக்குள் புகும் யானைகள் குப்பைக் கழிவுகள், ரேஷன் அரிசிகள் போன்றவற்றையும் சாப்பிட்டு பழகியுள்ளது.
மனிதர்களின் உணவுகளை சாப்பிட்டு பழகிய இந்த யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வீடுகள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவற்றை உடைத்து சாப்பிடும் பழக்கத்துக்கு மாறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் வனக் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தாலும் தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது, வீடுகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை மதுக்கரை,தொண்டாமுத்தூர், தடாகம்,பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த யானைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கோவை வனத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகளை விரட்டி வருகிறது. இதில், காரமடை அடுத்துள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பமான ஏஐ (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கோவை ஆனைகட்டி பகுதியிலும் இந்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகளை விரட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆனைகட்டியை அடுத்த கோபனாரி பகுதியில் வனத்தில் இருந்து ஒற்றை யானை வெளியே வந்த நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த AI காமிரா ஒலி எழுப்பி யானையை விரட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் யானை வனப்பகுதியில் இருந்து வெளியே வரும்போது மின் வேலியை தாண்டி வரும் காட்சியும், சைரன் சத்தத்தை கேட்டு சில நொடிகள் யானை நின்றுவிட்டு கெத்தாக செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications