ஆதவ் அர்ஜூனா பிரச்சனை.. விஜய் போனில் பேசினாரா?.. ஒரே வார்த்தையில் முடித்த எடப்பாடி
கோவை: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்த வீடியோ வெளியாகி சர்ச்சையாகி இருந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆதவ் அர்ஜூனா, அந்த வார்த்தைகள் என் இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் போனில் அழைத்தாரா, இல்லையா என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன், ஆதவ் அர்ஜூனா நடந்தபடியே பேசும் ஒரு வீடியோ வெளியானது. அதில் அவர், அண்ணாமலை தன்னுடன் 10 பேரை வைத்துக் கொண்டு 20 சதவீதம் வாக்கு பெற்றுள்ளார். எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்தது சர்ச்சையானது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதுதான் ஆதவ் அர்ஜூனாவின் உண்மை முகம் என்று அரசியல் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் அவர் மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள். இன்னும் சிலர், இதே நிலை தொடர்ந்தால் அவர் தவெகவை முடித்துவிடுவார். எனவே கவனமாக இருங்கள் என விஜய்க்கு எச்சரிக்கை பறந்து வந்தது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் போனில் அழைத்தாரா, இல்லையா என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக பொதுக்குழு கூடி பல தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர்.
அண்ணா திமுகவை பற்றி 27 ஆவது தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள். துரோக அதிமுக என்று அதில் தெரிவித்து இருக்கின்றனர். அது நாங்கள் கிடையாது. திமுக தான் நாட்டுக்கு துரோகம் இழைத்திருக்கிறது. அதிமுகவை பொருத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, அவர் மறைந்த பின்னரும் சரி சிறப்பான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டு காலமாக மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிபறி, பாலியல் தொல்லை என நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் இன்றைய தினம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஸ்டாலின் மாடல் ஆட்சிதான் துரோக ஆட்சி.
கல்விக் கொள்கையைப் பற்றி குறிப்பிட்டதாக கேள்விப்பட்டேன். 16 ஆண்டு காலம் திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தது. திமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது 16 ஆண்டுகள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். திமுக அப்போதெல்லாம் ஏன் கல்வி கொள்கையில் கவனம் செலுத்தவில்லை. ஆட்சிஅதிகாரத்தில் இருந்தபோது மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
ஆட்சி அதிகாரம் இல்லாதபோது மற்றவர்கள் மீது பழி செலுத்துவது திமுகவின் மீது வாடிக்கை. மோசமான ஆட்சி என்பதற்கு சாக்கடையை துணி வைத்து மூடி இருந்தது சாட்சி. சாக்கடை கழிவுநீர் செல்லும் கால்வாயை மறைத்து வைத்திருக்கிறார்கள். விஜய் தன்னிடம் போனில் பேசவில்லை. ஆதவ் அர்ஜூனா ட்வீட் போட்டு விட்டார் அத்துடன் முடிந்துவிட்டது.
நடிகர் விஜய் என்னிடம் எதுவும் பேசவில்லை. தேமுதிக உடன் சுமுகமான உறவு இருக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது நடக்காது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications