“எனக்கு நெருக்கமாம்.. அட.. யார்னே தெரியாதுங்க” - ரெய்டு பற்றி ஒரே போடாகப் போட்ட எஸ்.பி.வேலுமணி!
கோவை : நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தடாலடியாகத் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
தனது வீட்டில் நடந்த ரெய்டுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, "லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்" என திமுக அரசைக் குற்றம்சாட்டினார்.

வேலுமணி
கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இரண்டு முறை எஸ்பி வேலுமணி வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இன்று ரெய்டு நடந்தது.

பின்னணி என்ன?
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த ரெய்டு நடத்தப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அறிக்கை வெளியிட்டது.

26 இடங்களில்
எஸ்.பி. வேலுமணியின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என சுமார் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை சோதனை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

வேலுமணி பரபர பேட்டி
தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அப்போது பேசிய அவர், "காவல்துறையை திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறாத வகையில் பழிவாங்கும் படலம் நடக்கிறது. மின்கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அவர்கள் யாரென்றே தெரியாது
எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்பதால் என்னைக் குறிவைத்து இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. சோதனையில் பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனது நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் யாரென்றே எனக்குத் தெரியாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications