ஆஹா..'ஏக்நாத் ஷிண்டே' ஆட்டம் ஆரம்பம்- உடைகிறதா அதிமுக?
கோவை: மத்திய நிதி அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான நிர்மலா சீதாராமனை கோவையில் அதிமுக பிரமுகர்கள் சிலர் திடீரென சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது. இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக திட்டவட்டமாக இருக்கிறது. சேலத்தில் இஸ்லாமியர்களிடையே நேற்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் விருப்பப்படி அதிமுக நடந்து கொண்டது; இஸ்லாமியர்களுக்கு அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றார். மேலும் 2 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டோம் என்றார். இதனால் அதிமுக இனி பாஜகவுடனான கூட்டணியில் இடம் பெறாது என்பது திட்டவட்டமானது.

அண்ணாமலையிடம் விசாரணை: இதனிடையே அதிமுக கூட்டணியை விட்டு விலக காரணமே அண்ணாமலைதான் என்ற அடிப்படையில் டெல்லி பாஜக மேலிடம் அவரை வரவழைத்திருந்தது. டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலையிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்ட வரவேற்பு: இதனைத் தொடர்ந்து நேற்று இரவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமான், கோவை வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர் பாஜக நிர்வாகிகள். மாநில தலைவர் அல்லது முதல்வர் வேட்பாளர் ஒருவருக்கு எப்படி வரவேற்பு கொடுக்கப்படுமோ அப்படி ஒரு வரவேற்பு கொடுத்தனர் பாஜகவினர்.
அதிமுக விஐபிகள் அதிரடி சந்திப்பு: இதனைத் தொடர்ந்து இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார. அப்போது திடீரென அதிமுக முக்கிய பிரமுகர்களான 4 பேர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது பாஜகவின் மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனும் உடன் இருந்தார்.
அதிமுக ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போதே, அதிமுகவை 2 ஏக்நாத் ஷிண்டேக்களுடன் பாஜக உடைக்காமல் விடாது என நாம் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி இருந்தோம். இப்போது அதிமுகவின் 'ஏக்நாத் ஷிண்டேக்களின்' ஆதரவாளர்களாக கருதப்படும் 4 பேர் திடீரென நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருக்கின்றனர். இது அதிமுக தலைமையை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம். என்னதான் நெருக்கமாக வைத்திருந்தாலும் 'ஏக்நாத் ஷின்டே' இப்பவே வேலையை காண்பிக்கிறாரே என ஏக அதிர்ச்சியில் இருக்கிறதாம் அதிமுக தலைமை.! ஆட்டம் இனிதே ஆரம்பம்!












Click it and Unblock the Notifications