கோவையில் நிர்வாணமாக்கப்பட்ட மாணவன்.. ராகிங் செய்தால் அவ்வளவுதான்.. அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை
கோவை: கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவரை நிர்வாணப்படுத்தி சீனியர் மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் தான் கல்லூரியில் ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் திருப்பூரை சேர்ந்த மாணவன் ராகிங் கொடுமைக்கு ஆளானார். அதாவது கடந்த வாரம் அந்த மாணவன் தங்கியிருக்கும் விடுதிக்கு 3ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சென்றனர்.

அதன்பிறகு மதுபானம் வாங்கி அந்த மாணவனிடம் பணம் கேட்டுள்ளனர். மாணவன் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனை நிர்வாணமாக்கி பெல்ட்டால் முதுகில் தாக்கி உள்ளனர். அதோடு மொட்டை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 மாணவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்பு கல்லூரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ராகிங் என்ற பேச்சு இல்லாம் இருந்தது. படிப்பில் சேர்ந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் ராகிங் குறித்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அதோடு ஆசிரியர்களும் முதல் ஒரு மாதம் வாகனங்களில் வளாகங்களில் கண்காணிப்பு செய்வார்கள். இதனால் ராகிங் என்பது இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது கோவையில் ராகிங் நடந்து இருப்பது வருத்தத்துக்குரிய செய்தியாகும். ராகிங் செய்து அரசுக்கு அறிக்கை சென்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனை என்பது அதிகமாகும். அதோடு கல்லூரியில் படிக்க விடாமல் செய்வார்கள். இதனை மாணவர்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்'' என்றார்.
பொதுவாக ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க இப்போது உள்ள சட்டம் வழிவகுக்கிறது. மேலும் ராகிங்கிற்கு உள்ளாக்கப்படும் மாணவனுக்கான சித்ரவதையை பொறுத்தும் தண்டனை என்பது வேறுபடும். இதுதவிர, அந்த மாணவர்கள் கல்லூரியில் இருந்தும் நீக்கப்படுவதோடு, அவர்கள் வேறு எந்தக் கல்லூரிகளிலும் எப்போதுமே சேர முடியாமல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இதனை பல மாணவர்கள் அறிவது இல்லை. இதனால் தான் அவர்கள் ராகிங்கில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே தான் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு ராகிங் குறித்தும், ராகிங் தண்டனை குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications