போன கொடுங்க.. கனிமொழி எம்பி பிஏவின் தம்பி நானு! மதுபோதையில் மண்டைகாய விட்ட கும்பல்! வெளியான வீடியோ!
கோவை : கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் தான் கனிமொழி எம்பி-யின் உதவியாளரின் தம்பி என கூறி குடி போதையில் வந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தில் இளைஞர்களிடையே கஞ்சா மது உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக இருக்கிறது. இதில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசார் மிகவும் பாதிப்படைகின்றனர்.

மது போதையில் அல்லது கஞ்சா போதையில் சாலைகளில் சுற்றித் திரியும் இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டால் அவர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது என அத்துமீறல்கள் தொடர்கின்றன.
அதே நேரத்தில் போலீசாரின் பாதுகாப்பும் இது போன்ற நிகழ்வுகளால் கேள்விக்குறியாகி உள்ளது. ரவுடி என விரட்டுவது, அரசியல்வாதிகளின் உறவினர்கள் என மிரட்டுவது என அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது போலீசாரை ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் கோவையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குடிபோதையில் வந்த இளைஞரை தடுத்த போலீசாரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் காட்டூர் காவல் நிலைய போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சென்னை பதிவெண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் வந்த இளைஞர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
இதை அடுத்து காவல்துறையினர் அவர்களை விசாரித்த போது உடனடியாக அதில் இருந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் தகாத முறையில் பேசி உள்ளார். மேலும் தனது செல்போனை எடுத்து முக்கிய பிரமுகர் ஒருவருக்கு அழைப்பதாக கூறவே உடனடியாக போலீசார் அந்த நபரிடம் இருந்து செல்போனை பிடுங்கி உள்ளனர்.
இதை அடுத்து அந்த நபர் காவல் துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தான் எம்பி கனிமொழியின் உதவியாளரின் தம்பி எனவும் நீங்கள் யார் உங்கள் பெயர் என்ன எனவும் கேட்டு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். அந்த நபருடன் வந்த இளைஞர்கள் சிலர் சமாதானம் செய்ய முயன்றும் அந்த நபர் சத்தமிட்டு கொண்டே இருந்த நிலையில் காரில் வந்த நான்கு பேரையும் காவல்துறையினர் காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே இளைஞர்கள் மது போதையில் எம்பி கனிமொழியின் பெயரைக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications